இந்தவிடயங்கள் அடங்கிய கடிதமொன்றினை நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. அவ்வமைப்பினால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் வருமாறு,
உங்கள் தேர்தல் வெற்றி குறித்தும் எமது தேசத்தின் 6வது ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பெற்ற வெற்றிக்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கென பொது எதிரணியுடன் இணைந்துகொள்வதற்கு சரியான தருணத்தில் தாங்கள் மேற்கொண்ட தீர்மானம் குறித்தும் நாம் உங்களை உளப்பூர்வமாக பாராட்டுகிறோம்.
எமது தேசத்தில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி என்பவற்றை ஏற்படுத்துவதற்காக, பொது எதிரணியின் ஓர் அங்கமாக இருந்து ஜனவரி 8 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்துக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆரம்பம் முதல் அர்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளது .
உங்களது தலைமையில் நாட்டில் நல்லாட்சியை ஏட்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எமது மக்களில் பெரும்பாலான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர், மலாயர் என அனைத்து மக்களும் மனப்பூர்வமாக ஆதரித்து உங்கள் வெற்றிக்காக வாக்களித்துள்ளனர் .
உண்மையான நல்லாட்சிப் பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் (09.01.2015) சுதந்திர சதுக்கத்தில் மிகவும் எளிமையான வகையில் உங்கள் பதவியேற்பு நிகழ்வை நடத்தி முன்மாதிரியாக நடந்த காட்டியுள்ளீர்கள். இதனை நாம் பாராட்டுவதோடு 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கௌரவ ரணில் விக்கரமசிங்க அவர்களை உடனடியாக பிரதமராக நியமித்தமையையும் நாம் மெச்சுகிறோம்.
தற்போது அடுத்த பணியாக உங்களது அமைச்சரவையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள் என நம்புகிறோம். தாங்கள் அமைக்கும் அமைச்சரவை தான் அரசாங்கத்தின் அச்சாணியாக செயற்படவுள்ளது.
மேலும் நாட்டு மக்களினதும் பொது எதிரணியின் கூட்டுக்கட்சிகளினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும், சட்ட ஆட்சி, நல்லாட்சி என்பவற்றை ஏட்படுத்துவதற்கும் நீங்கள் ஏற்படுத்தும் அமைச்சரவையிலேயே நீங்கள் பெருமளவில் சார்ந்திருப்பீர்கள் .
எனவே உங்கள் அமைச்சர்களை தெரிவு செய்யும்போது, முன்னைய அரசாங்கத்தில் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள், பொதுச்சொத்துக்களை சுரண்டியவர்கள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எவரையும் உங்கள் அமைச்சரவையில் உள்வாங்குவதை தவிர்ந்து கொள்ளுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தாழ்மையாக வேண்டிக்கொள்கிறது.
இவ்வாறானவர்கள் உங்கள் அமைச்சரவையில் இடம் பெறுவது நாட்டில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு பெரும் சவாலாக அமையும் அதேவேளை, உங்களது தலைமையின் கீழ் அர்த்தமுள்ள நல்லாட்சியொன்றை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் மத்தியில் புதிய அரசாங்கத்தை பற்றிய நம்பகத்தன்மையையும் இல்லாமல் செய்துவிடும்.
எனவே மேற்படி எமது வேண்டுகோளை கவனத்திற்கொண்டு செயற்படுவீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.
நன்றி
இவ்வண்ணம்
M.R. நஜா முஹம்மத்
பொதுச் செயலாளர்