Saturday, January 10, 2015

முஸ்லிம் சமூகம் பொறுப்பாகவும், அவதானமாகவும் தேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

  மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

அதிமேத குஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றியில் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பங்கு கொண்டமைக்கு பின்னால் சமூகம் சார்ந்த பல்வேறு நியாயங்கள் இருந்தன.

ஆனால் எதிர்க்கட்சி பொது முன்னணி அமையும் பொழுது தேசத்திற்கும் எல்லா சமூகங்களிற்கும் பொதுவான தெளிவான வேலைத் திட்டம் ஒன்று இருந்தது.

மஹிந்த அரசின் மீதான அதிருப்தி குறித்த சமூகம் சார்ந்த நியாயங்களைப் பொறுத்தவரை அவை எமது கடந்தகால முதுகெலும்பற்ற கையாளாகாத சோரம் போகும் சூதாட்ட அரசியலினை அடியாகக் கொண்டவை என்பதில் சந்தேகமில்லை.

"மைத்த்ரி" தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலைப்பொறுத்தவரை அங்குதான் எல்லா  சமூகங்களும் ஒட்டு மொத்தமாக மஹிந்த அரசின் பக்கம் மாத்திரமே விரல்களை நீட்டும் பலநூறு நியாயங்கள் இருந்தன.


மேற்படி தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் பங்காளர்களாக கொள்கை வகுப்பாளர்களாக ஆரம்பத்திலேயே ஆதரவு தந்த இணைந்து கொண்ட முஸ்லிம் தலைமைகள் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாகவே இருந்தார்கள்.

எமது சமூகம் சார்ந்த நியாயங்களை அல்லது குறுகிய அரசியல் இலக்குகளுக்கான சுலோகங்களை நாம் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலில் முற்படுத்துவோமாயின் அது மஹிந்த அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு மென்மேலும் வலிமை சேர்க்கும்.

மாறாக, தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் பார்வையாளர்களாக, அல்லது இறுதிக்கட்ட பயனாளர்களாக அன்றி கொள்கை வகுப்பிலும், களப்போராட்டங்களிலும்  முதன்மையான பங்காளர்களாக முஸ்லிம்கள் மாறுகின்ற பொழுது மிகவும் சாணக்கியமாக சமூகத்தின் வெற்றி வாசல் தேடி வரும் என்ற நம்பிக்கை இருந்தது.

இன்று நாம் சார்ந்து நின்ற அணி வென்று இருக்கிறது, அதன் தேசிய நிகழ்ச்சி நிரல் இன்னும் பல சவால்களை எதிர் நோக்கியுள்ளது, மாற்று அணி முற்றாக பலமிழக்கவில்லை.

கடந்த காலங்களில் நமது தலைமைகள் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும், சமூகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் இழைத்த தீங்குகள் போன்று அவர்களின் இறுதிக்கட்டப் பாய்ச்சலின் பொழுது முன்வைத்த வெற்றுக் கோஷங்கள் மாற்று அணியின் நிகழ்ச்சி நிரலையும் கணிசமாக காயப்படுத்தியமை உணரப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அடுத்த இரு சமூகங்களை விடவும் மிகவும் பொறுப்பாகவும், அவதானமாகவும், தன்னடக்கமாகவும் தேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு மிகவும் சிறந்த கொள்கை தெளிவுகளுடன் கூடிய அரசியல் தலைமைகளும் சர்வதேச,பிராந்திய பின்புலன்களும் இருக்கின்றன.

அல்லாஹ் ஒருவனை மாத்திரமே விசுவாசித்துள்ள நாம் தேசிய அரசியலில் இன மத மொழி பாகுபாடுகளுக்கு அப்பால் இதய சுத்தியுடன் சாமர்த்தியமாகவும், சமயோசிதமாகவும், சாணக்கியமாகவும் பங்களிப்புச் செய்து எமது நிலைகளை மாற்றிக் கொள்ளாவிடின் நமது தலை எழுத்தை இறைவன் மாற்றப்போவதில்லை.

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தை பலிக்கட்டவாக்குவதற்கான பிரயத்தனங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டனவோ இன்று அதை விடவும் மும்முரமான முனைப்புக்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்பதனை முஸ்லிம் சிவில் சன்மார்க்க மற்றும் அரசியல் தலைமைகள் உணர்ந்து செயற்படல் வேண்டும்.

முற்போக்கான தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்த தேசத்தின் தலைமைகள், அதற்கு வாக்களித்த சுமார் 45 இலட்சம் பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் கொள்கை வகுப்பாளர்கள் வகுப்பாளர்கள் மதத் தலைமைகள் என சகல தரப்புக்களினதும் உணர்வுகளை நாம் மதித்து தன்னடக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், பதவி இழந்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களித்த அதே அளவிலான சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் புரிந்து, ஜனநாயக அரசியல் கட்டமைப்பின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் நாம் மதித்து நடக்க வேண்டும்.

முஸ்லிம் பிரதேசங்களில் அளவுகடந்த ஆரவாரங்கள் இன அடிப்படையிலான வரவேற்புக்கள் கொண்டாட்டங்கள், பட்டாசுகள், குட்டி சுல்தான்களுக்கான அளவுகடந்த ஆர்பரிப்புக்கள்,ஆவேஷங்கள், ஊடகங்களில் வீர வசனங்கள், சாதனை சமர்ப்பணங்கள் மார் தட்டல்கள் என முட்டாள்தனமான செயற்பாடுகள், சமூக வலைதளங்களில் ஆரவாரமான பதிவேற்றங்கள், விரும்பத் தகாத உடனடி குறுகிய மற்றும் நீண்டகால பிரதி விளைவுகளையே கொண்டிருக்கும், அவை சமூகத்தினதும் தேசத்தினதும் நிகழ்ச்சி நிரலை காவு கொள்ளும் என்பதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் சமாதானம்,சமத்துவம், நீதி, நியாயம், நல்லாட்சி, பொருளாதார சுபீட்சம் என்பன மலர்வதற்கான பங்களிப்பினை செய்வது எங்களைப் பொறுத்தவரை ஒரு தெரிவு அல்ல அது தலைமேல் விதிக்கப்பட்ட கடமை என உணர்ந்து நாம் எமது எதிர்கால அரசியல் பாதையையும் பயணத்தையும் தீர்மானித்துக் க்போள்ள வேண்டும்.

இந்த அறிவுரையை நான் முதலில் எனக்கும் எனது நண்பர்களுக்கும் பொறுப்புணர்வுடன் முன்வைப்பதோடு முஸ்லிம் சமூகத்தின் சிவில் சமூக சன்மார்க்கத் தலைமைகளிடமும் சமர்ப்பிக்கின்றேன், குறிப்பாக ஆளும் மற்றும் எதிரணியில் உள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளிடமும் அல்லாஹ்வை பாய்ந்து கொள்ளுமாறு மன்றாடி முன்வைக்கின்றேன்.

இயன்றவரை பகிர்ந்து கொள்ளுங்கள், வலைதளங்களில் ஊடகங்களில் பிரசுரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.