ஜனாதிபதி
தேர்தல் காலத்தில் அந்தக் கூட்டணியின் பங்காளி கட்சிகள் சில அதிலிருந்து
விலகின. சில மாகாணசபை உறுப்பினர்களும் எதிரணியுடன் இணைந்து கொண்டார்கள்.
எதிரணியிலிருந்து ஆளுந்தரப்புக்கும் சிலர் மாறினார்கள்.
37
உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் 2012ம் ஆண்டு மாகாண சபைத்
தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு 15 உறுப்பினர்களை வென்றிருந்தாலும்
ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் (7 உறுப்பினர்கள்) ஆதரவை பெற்று ஆட்சியை அமைத்துக் கொண்டது.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட
கட்சிகள் பொது எதிரணியுடன் இணைந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணசபையின்
ஆட்சியை எந்த நேரத்திலும் இழக்கும் நிலை ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு
ஏற்பட்டுள்ளது.
ஆளும் கூட்டணியிடம் 11 பேர் எதிரணியிடம் 26 பேர்
கிழக்கு
மாகாணசபையின் தற்போதைய நிலவரத்தின்படி, 22 உறுப்பினர்களை கொண்டிருந்த
ஆளும் தரப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ள நிலையில் எதிரணி
உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு மாகாணசபைத்
தேர்தலைத் தொடர்ந்து 11 உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி (4 உறுப்பினர்கள்)
ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பற்கான முயற்சிகளை
மேற்கொண்ருந்தாலும் இறுதி நேரத்தில் அது கை கூடவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.ம.சு. கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஆதரவு வழங்கியது.
தற்போது
கிழக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில்
பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
இது
தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சி. தண்டாயுதபாணியை தொடர்பு கொண்டு
கேட்டபோது ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டு என பதில் அளித்தார்.
கிழக்கு
மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ. எம். ஜெமீல்
மற்றும் மாகாண அமைச்சர் ஒருவரும் தொலைபேசி ஊடாக இது தொடர்பில் தன்னுடன்
பேசியிருந்தாலும் அதிகாரபூர்வமாக பேச்சுக்கள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை
என்று தண்டாயுதபாணி கூறினார்.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிய கிழக்கு மாகாணசபையின் குழுத் தலைவர் ஏ. எம்.
ஜெமீலை தொடர்பு கொண்டபோது, இதுபற்றி நாளை ஆராயப்படவிருப்பதாக அவர் பதில்
அளித்தார்.
கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
தொடர்பாக மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதை தொடர்புகொள்ள எடுத்த
முயற்சிகள் பலனளிக்கவில்லை.
எனினும், இது தொடர்பில் கருத்து
வெளியிட்ட மாகாண காணி மற்றும் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, எதற்கும்
தாங்கள் முகம் கொடுக்கத் தயாராக உள்ளதாக பிபிசி தமிழோசையிடம் கூறினார்.