
விரைவில் இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் அரசியலை தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலோடு தெளிவான அடிப்படைகளில் உள்வாங்கச் செய்து மிகவும் சமயோசிதமாகவும், சாணக்கியமாகவும் முற்போக்கு தேசிய சக்திகளுடன் இணைந்து நாம் களமிறங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
நல்லாட்சி மாற்றங்களிற்கான தேசிய நிகழ்ச்சிநிரலை காயப்படுத்தும் இனரீதியிலான அரசியலை சந்தைப்படுத்த முனைவதும், எமது அரசியல் பிளவுகளை அரங்கேற்றுவதும் சமூகத்திற்கும் தேசத்திற்கும் எந்த வகையிலும் நன்மை பயக்கப் போவதில்லை.
புதிய தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறை கலந்த தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மை இனங்களின் மட்டும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்கின்ற வகையில் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படவும், இரட்டை உறுப்பினர் தொகுதிகள்
அடையாளப் படுத்தப் படவும் இடமிருப்பதால் வேறுபாடுகளை களைந்து அவசரமாக ஒன்றுபடுவது அவசியமாகும்.
அதேவேளை, புதிய தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம்களது வாக்கு வங்கி ஆளும் எதிர்க் கட்சிக்குள்ளும் முஸ்லிம் கட்சிகளுக்குள்ளுமாக சிதறுண்டு போகும் பொழுது அந்தத் கட்சிகளும் பிரதிநிதித் துவங்களை இழந்து சமூகமும் மீண்டும் மீண்டும் அரசியலில் அனாதைகளாக நேரிடும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் தொடர்பான முயற்சிகளில் முஸ்லிம் புத்திஜீவிகள் கவனம் செலுத்தியிருந்தனர், ஆனால் ஆளும் கட்சியில் கடைசி நேரம் இருந்த முஸ்லிம் அரசியல் குழுக்களினால் எத்தகைய பங்களிப்புக்களும் செய்ய முடியவில்லை, எனவே இந்தக் குறுகிய காலத்திற்குள் தம்மால் இயன்ற ஒருங்கிணைந்த பங்களிப்பினை சகலரும் செய்ய வேண்டும்.
ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியில்ஹுனைஸ் பாரூக் அசாத் சாலியும், சுதந்திரக் கட்சியில் ஆக்டர் இல்யாஸ், பைசர் முஸ்தபா போன்றோர் இணைந்திருந்தாலும் இவ்வாறான ஒரு புரிந்துணர்வை சகலரும் தமக்குள்ள ஏற்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
எதிர்வரும் தேர்தல்களில் தென்னிலங்கை அரசியலில் இனமதவாதிகளின் பங்களிப்பு முழுவீச்சிலும் கட்டவிழ்க்கப்படும் என்கின்ற காலநிலை யதார்த்தங்களை யான பரிமாணங்களில் முஸ்லிம் அரசியல் குழுக்கள் உள்வாங்கத் தவறின் காலம் கடந்து நாம் கைசேதப் படுவதில் அர்த்தமில்லை.