Friday, September 26, 2014

மியன்மார் அசின் விராத்துவின் வருகைக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு கடிதம்

176843322mcsl3மியன்மாரின் பௌத்த பிக்கு அசின் விராத்துவை பொது பல சேனா அமைப்பு இலங்கைக்கு அழைத்துள்ளமைக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் கடிதம் ஒன்றை முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

969 இயக்க தலைவர் அசின் விராத்து தேரர் மியன்மாரில் முஸ்லிம்களை கொன்றழித்தவர் என்பது யாவரும் அறிந்ததே. மியன்மாரின் முஸ்லிம் விரோத தலைவர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர். பௌத்த அடிப்படைவாதி.
இவ்வாறான ஒருவர் எதிர்வரும் செப்டெம்பர் 28ம் திகதி பொது பல சேனா ஏற்பாடு செய்துள்ள பிக்குகள் சங்க கவுன்ஸில் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக வலுவான வதந்திகள் பரவி வருகின்றன.
அசின் விராத்து தேரரின் ´ரைம்ஸ் சஞ்சிகை´ பர்மாவின் பௌத்த தீவிரவாதி எனக் கூறி முதல் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தது. மியன்மாரில் வன்முறையை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நபர் இலங்கைக்கு வருவது இலங்கையின் நல்லிணக்கத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தும்.
மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவர் அசின் விராத்து தேரர் என உலகமே குற்றம் சுமத்தியுள்ளது. அவர் இலங்கை வந்து பொதுபல சேனா கூட்டத்தில் உரையாற்றினால் அது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட உந்துதலாகலாம்.
அளுத்கமவில் ஞானசார தேரர் நிகழ்த்திய உரையே வன்முறைக்கு வழிவகுத்தது. அசின் விராத்து தேரர் இலங்கை வர அனுமதி அளிக்கப்பட்டால் அது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.
எனவே அசின் விராத்து தேரருக்கு விசா அனுமதி வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும். அப்படி விசா வழங்கினால் அது தாய்நாட்டின் அமைதிக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.´ – இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.