Sunday, August 4, 2013

“நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வளர்ச்சி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா..?”

இலங்கை முஸ்லிம்களின் சுயமரியாதையைப் பேணவும் அரசியல் உரிமைகளைப் பெற்றவர்களாக இலங்கை முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் வாழவும் தந்தை செல்வாவின் அரசியற் பாசறையில் வளர்ந்து மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீ.ல.மு. காங்கிரஸை தங்களது சுயநலன்களுக்காக உடைத்துச் சிதற வைத்து இன்று முஸ்லிம் சமூகத்தின் நலன்களிலும், அதன் உரிமைகளைப் பேணுவதிலும் கடுகளவும் அக்கறையற்றிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தோற்றமும், அதன் அரசியல் சமூகக் கண்ணோட்டத்துடனான வளர்ச்சியும் சற்று கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றின் அடி நுனி தெரியாமல் தமிழ்த் தலைமைத்துவங்களை ஓரங்கட்டி சிங்களத் தலைமைகளுக்கே ஜால்ரா அடித்து அரசியல் பிழைப்பு நடாத்தும் அப்துல் பாரி போன்றவர்கள், எந்த இலட்சியத்தின் அடிப்படையில் வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களிடையே ‘இன நல்லுறவுக்கான ஒன்றியத்’தின் தலைவராகச் செயற்பட்டு வருகின்றார் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
வன்னி மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தி அவர்களை இனவுணர்வற்ற மக்களாக வாழ வைப்பதற்குப் பாடுபட வேண்டிய அப்துல் பாரி போன்றவர்களின் அற்ப அரசியல் ஆதாயங்களை எதிர்பார்க்கும் சுயநலக் கருத்துக்களானது வடபுலத்தில் மாத்திரமல்லாது முழு இலங்கையிலும் வாழுகின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு எதிர்காலத்தில் மேலும் இடைவெளியும் பிரிவினையுணர்வுமே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இலங்கையின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்குகின்றபோது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் பாசறையிலேயே முஸ்லிம் சமூகம் முறையான அரசியல் பாடங்களைக் கற்று வந்துள்ளது என்பது நன்கு புலனாகும். ஸ்ரீ.ல.மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் தமிழரசுக் கட்சியின் நீண்டகால அங்கத்தவர் என்பது பலரும் அறிந்த விடயமாகும்.
கல்முனை எம்.எஸ். காரியப்பர், எம்.சி. அகமது, மூதூர் எம்.ஈ.எச். முகம்மதலி, நிந்தவூர் எம்.எம். முஸ்தபா, பொத்துவில் எம்.ஏ. அப்துல் மஜீத் போன்றவர்கள் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற வரலாறுகளையும் பின்னர் சிங்களப் பேரின அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகளுக்காக சோரம் போன சோக வரலாறுகளையும் நம்மால் பார்க்க முடியும்.
இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவர்கள் என ஒரு காலத்தில் கருதப்பட்ட சேர். ராஸிக் பரீத் 1960ம் ஆண்டு பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்கடிக்கப்பட்டதும் அல்ஹாஜ் மாக்கான் மரைக்கார் பதியுத்தீன் மஹ்மூத் போன்றவர்கள் முறையே 1965ம் 1977ம் ஆண்டுகளில் மட்டக்களப்புத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியதும் முஸ்லிம் மக்களின் அரசியல் விழிப்புணர்வை இந்நாட்டிற்கு எடுத்துக்காட்யுள்ளது.
1956ம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அஸீஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் தமது நாடாளுமன்றப் பதவிகளையே இராஜினாமாச் செய்து எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவுக்கு முஸ்லிம் சமூகம் தமிழ்ச் சமூகத்துடனும் தமிழ் மொழியுடனும் பின்னிப் பிணைந்து வாழ்ந்ததும் வரலாறாகும்.
1960ம், 1970ம் ஆண்டுக் காலப் பகுதிகளில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியானது தமிரசுக் கட்சியுடனும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும் இணைந்து இந்த நாட்டில் செயற்பட்டே வந்துள்ளது.
இவ்வாறெல்லாம் தமிழ்த் தேசியவாதப் போக்கானது மிதவாத அரசியலிலிருந்து தீவிரவாதக் குழுக்களின் ஆளுகைக்குள் மெல்ல மெல்லக் கரைந்து போகத் தொடங்கிய கால கட்டங்களில்தான் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவில் மெது மெதுவான விரிசல்கள் ஏற்பட்டன. எனினும் தமிழ்த் தீவிரவாத ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஆயதந்தாங்கிய இயக்கங்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பும் இருந்தே வந்தது என்பதையம் மறுக்க முடியாது.
1981ல் நடைபெற்ற மாவட்ட சபைக்கான தேர்தலின்போது முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நிறுத்துமாறு மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அக்காலப் பகுதியில் 161481 முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் 79725 தமிழர்கள் சிறுபான்மையாகவும் இம்மாவட்டத்தில் வாழ்ந்த வேளையில் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் இவ்வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாமல் ஆ. வேல்முருகு என்ற தமிழ் வேட்பாளரையே தமிழர் விடுதலைக் கூட்டணி நிறுத்தியது. அதன் பின்னரே மர்ஹும் அஸ்ரப் அவர்களுக்கு முஸ்லிம்களின் தலைவிதியைத் தாமே தீர்;மானிக்க வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது.
அதற்கமையவே ஏற்கனவே தமிழ்த் தலைமைகளுடன் இணைந்து செயற்பட்டபோது உருவாக்கியிருந்த முஸ்லிம் ஐக்கிய முன்னணிக்குப் பதிலாக ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ எனும் கட்சியை 21.09.1981ல் காத்தான்குடியில் அங்குரார்ப்பணம் செய்தார். அன்று தமிழ்த் தலைமைகளால் அரசியல் ரிதியாகப் புறக்கணிக்கப்பட்டது முஸ்லிம் மக்களின் அரசியல் தனித்துவத்திற்கு வழி கோலியது.
எனினும் முஸ்லிம் சமூகத்தின் அத்தனித்துவமும் அரசியல் பலமும் அவரது மறைவுடன் இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகளால் துண்டாடப்பட்டு அஸ்தமித்துப் போனது. அவரது ‘முஸ்லிம் சமூக அரசியல் சித்தாந்தம்’ முற்றாக மழுங்கடிக்கப்பட்டு ‘ முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயநல அரசியல் சித்தாந்தமே” இன்று வரையும் நடைமுறையில் இருந்து வருகின்றது.
இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தமிழ் ஆயுதக் குழுக்களின் தோற்றத்திற்குப் பின்னரே பல்வேறு அநியாயங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. அந்த வகையில் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் ஹஜ் யாத்ரீகர்களைக் கடத்திக் கொலை செய்தமை ஏறவூரில் தூக்கத்திலிருந்த அப்பாவி மக்களைப் படுகொலை செய்தமை போன்ற பல்வேறு மிலேச்சத்தனமான செயற்பாடுகள் இடம்பெற்றதை நாம் நினைவு கூறலாம்.
LTTE உட்பட தமிழ் ஆயுதக் குழுக்களின் வலிமை இந்நாட்டில் ஓங்கியிருந்த காலகட்டத்தில் தமிழ் மிதவாதத் தலைமைகளின் கரங்களும் வாய்களும் கட்டப்பட்டிருந்தது. மாத்திரமன்றி தமிழ்த் தலைமைகளும் ஆயுததாரிகளால் அழிக்கப்பட்ட வரலாறுகளையும் நாம் மறந்த விட முடியாது. இந்த வகையில் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் குமார் பொன்னம்பலம் ராஜன் சத்தியமூர்த்தி லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற பல தமிழ் அரசியல் தலைமைகள் ஆயதங்களின் ஆட்சியில் கொடூரமாகப் பறிக்கப்பட்டன.
தேசத்தின் தலைவர்களான ராஜீவ் காந்தி பிரேமதாசா போன்றவர்களின் உயிர்களும் காவு கொள்ளப்பட்டன. சந்திரிக்கா அம்மையாரும் மயிரிழையில் உயிர்தப்பினார். இவ்வாறு புலிகளின் அட்டூழியங்கள் மலிந்து காணப்பட்ட ஒரு காட்டாட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகம் மாத்திரமன்றி தமிழ்ச் சிங்கள சமூகங்களும் மிகவும் அச்சத்துடன்தான் இந்நாட்டில் வாழ்ந்துள்ளனர்.
வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்ட வரலாற்றுத் துயர்மிக்க நிகழ்வினை முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மறைந்த எம். சிவசிதம்பரம் ஐயா அவர்கள் தாம் வாழுங்காலத்திலேயே பகிரங்கமாகக் கண்டித்திருந்ததையும் நாம் இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும்.
மாத்திரமன்றி வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம் மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி வரும்வரை தான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர மாட்டேன் எனவும் அவர் சபதம் பூண்டிருந்ததோடு இறக்கும் வரை அவர் அங்கு செல்லாமலேயே இருந்தார் என்பதையும் வடபுல முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த அர்த்தத்துடன் இவ்வேளையில் நினைவு படுத்திப் பார்க்கவும் வேண்டும்.
விடுதலைப் புலிகள் உருவாகி முஸ்லிம் சமூகத்திற்கெதிராகத் தமது ஆயதங்களை நீட்டுவதற்கு முன்னரே இந்த நாட்டில் சிங்கள அரச படையினர் முஸ்லிம் சமூகத்தை அவர்களின் பள்ளிவாசலுக்குள்ளேயே கொடூரமான முறையில் சுட்டுக் கொன்று காட்டாட்சி செய்த வரலாறும் நம்முன்னே இருக்கின்றது.
1970 தொடக்கம் 1977 வரையான காலப்பகுதியில் இந்நாட்டை ஆட்சி செய்த ஸ்ரீ.ல.சு. கட்சியின் ஆட்சியில் மூத்த முதுபெரும் முஸ்லிம் அரசியல் தலைவரான டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் கல்வியமைச்சராக இருந்த வேளையிலேதான் 02.10.1976ல் புத்தளம் ஜும்ஆப்பள்ளிவாசலுக்குள் சிங்கள இராணுவமும் பொலீசாரும் ஏவிவிடப்பட்டு தொழுகையிலிருந்த 9 முஸ்லிம் சகோதரார்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
புத்தளம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக அப்துல் கபூர் என்ற முஸ்லிமும் புத்தளம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக ஹஸன் குத்தூஸ் என்பவரும் இருக்கத்தக்க நிலையில்தான் இந்த உயிர் பறிப்புக்கள் நிகழ்ந்தன. பள்ளிவாசலென்றும் பாராமல் முஸ்லிம்களின் உயிர்களைக் காவு கொள்வதில் இந்த நாட்டில் முன்னுதாரணமான வரலாற்றைக் கொண்டிருப்பவர்கள் சிங்களவர்களேயாகும் என்பதையும் நாம் மறத்தலாகாது.
இவ்வாறான காலகட்டத்தில்தான் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் உள்ளிட்ட பல முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட மிதவாதத் தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 27.01.2002ல் பிரபாகரனாலேயே இந்த நாட்டில் உருவாக்கப்பட்டது. அந்தப் பிரபாகரனுடன்தான் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் இன்றைய தலைவரான நீதியமைச்சர் றவூப் ஹக்கீமும் 13.04.2002ல் பேச்சுவார்த்தை நடாத்தி உடன்படிக்கையும் செய்து கொண்டார்.
எனவே தமிழ்த் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தியும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்தும் வந்திருப்பதானது வரலாறு நெடுகிலும் காலத்திற்குக் காலம் நடைபெற்று வந்துள்ளதேயன்றி வன்னி மாவட்;ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவர் எனச் சொல்லிக் கொள்ளும் அப்துல் பாரி போன்றவர்கள் நினைப்பது போல இதுதான் முதல் தடவையான – சமூகத் துரோகமான நடவடிக்கையன்று.
1977 தொடக்கம் இந்த நாட்டில் சிறிதும் பெரிதுமாக் தொடர்ந்து வந்து நமது நாட்டை மாத்திரமன்றி முழு உலகையும் அச்சுறுத்தும் வகையில் பேரியக்கமாகக் கட்டமைக்கப்பட்டுக் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத அட்டகாசம் 16.05.2009ல் முற்று முழதாகத் தோற்கடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
புலிகளின் மறைவுக்குப் பின் இந்நாட்டில் 30 ஆண்டுகால யுத்தத்தினால் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருந்த மூவின மக்களும் நிரந்தர அமைதியும்> சமாதானமும்> இனங்களுக்கிடையிலான ஐக்கியமும் ஏற்பட்டு விடும் என்றே பெரிதும் நம்பினார்கள்.
குறிப்பாக யுத்தத்தைக் காரணங்காட்டி வெகுவாக அதிகரித்திருந்த வாழ்க்கைச் செலவு பெரிதும் குறைந்து விடும் என யாவரும் எதிர்பர்த்தனர். தமது பிள்ளைகளின் கல்வியெழுச்சிக்கு இனி வழி பிறக்கும் என நம்பினார்கள். யுத்தம் முடிந்த கையோடு ‘இந்நாட்டில் சிறுபான்மையென்று ஒரு இனம் கிடையாது’ என ஜனாதிபதி சூளுரைத்தபோது தமிழ் – முஸ்லிம் மக்கள் அனைவரும் நாம் யாவரும் சிங்கள மக்களுக்குச் சமமாக நடாத்தப்படுவோம் என்றே கருதிக் கொண்டோம். ஆனால் எல்லாமே வெறுங் கற்பனையாகவே கடந்த நான்காண்டுகளைக் கடத்தியுள்ளது.
இன்று முழு நாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரச்சனைகள் பல்வேறு தலைப்புக்களில் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற சர்வதேசம் தலையிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் அவர்களின் சொகுசு அமைச்சு இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே ‘நக்குண்டார் நாவிழந்தார்’ நிலையில் இருந்து வருகின்றன.
முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதற்காக மர்ஹும் அஸ்ரப் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் தனித்துவ அரசியல் இன்று தாறுமாறாக உருக்குலைந்து சிங்களப் பேரினவாத்தின் எடுபிடியாக மாறியுள்ளது. புலிகளின் மூச்சில் கட்டுண்டு கிடந்த தமிழ்ச் சமூகத்தின் தலைமைத்துவம் அவர்களின் அழிவின் பின்னரே சுதந்திரமான கருத்துக்களை வெளியிடவும் செயற்படவும்; ஆரம்பித்தன.
அந்த வகையில் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்காக கூட்டமைப்பின் தலைமைத்துவம் பகிரங்கமாக வருத்தமும் கவலையும் தெரிவித்திருந்தது. கிழக்கு மாகாணத்தை சிறுபான்மைச் சமூகங்களின் ஆட்சி பீடமாக நிறுவுவதற்காக ஸ்ரீ.ல.மு. காங்கிரஸுக்கே முதலமைச்சர் பதவி மாத்திரமின்றி சகல அமைச்சுக்களையும் கொடுப்பதற்கும் அவர்கள் முன்வந்தனர்.
கிழக்கு மாகாணம் முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட ஒரு மாகாணம் என்ற வகையில் முஸ்லிம் சமூகத்தின் கைகளில் மாகாண ஆட்சி நிர்வாக அதிகாரத்தை வழங்குவதற்கு முன் வந்ததை விட வேறு எந்த வகையில்தான் அவர்களால் முஸ்லிம் சமூகம் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்த முடியும்? அந்தப் பொறுப்பினை ஏற்று சுயமரியாதையுடன் தாமும் வாழ்ந்து தமது மக்களையும் வாழ வைக்க முன்வராமல் அற்ப அமைச்சுப் பதவிகளுக்காகச் சோரம் போன முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களை நாம் என்னவென்பது?
இந்த நிலையில்தான் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான இறுக்கம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. கிழக்குத் தேர்தலில் நூலிழையில் தப்பிப்போன தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் நல்லுறவை வடக்குத் தேர்தலிலாவது மிளப் புத்துயிர்ப்பித்துப் பார்க்கலாம் என்ற நல்லெண்ணத்துடன்தான் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது முஸ்லிம் புத்திஜீவிகளின் கூட்டிணைவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியது.
நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இத்தனை அநியாயங்களும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிங்களப் பேரினவாதத் தாண்டவம் ஆடும் அரசாங்கத்திற்கே தமது ஆதரவுகளை வழங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்> ஒரு உள்ளுராட்சி சபையில் இரண்டு உறுப்பினர்களை மட்டுமே தனது அரசியல் பலமாகக் கொண்டுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பின் இவ்வருகையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு விடயமேயாகும் எனலாம்.
அவர்களை வரவேற்ற கூட்டமைப்பின் தலைமைத்துவம் அவர்களின் புதிய எண்ணக்கருக்களையும் இலட்சிய நோக்கங்களையும் உள்வாங்கியது. நாட்டில் நல்லாட்சிக்கான அரசியல் அபிலாஷைகளையும் எதிர்காலத் தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் நல்லுறவுக்கான எதிர்பார்ப்பையும் முழுமையாக ஏற்றுக் கொண்டது.
வட மாகாண ஆட்சிக்களம் கூட்டமைப்பின் கைகளுக்கு வருமாயின் இம்மாகாண முஸ்லிம்களை அவர்கள் கையாளவுள்ள நடைமுறைகளை தேர்தல் விஞ்ஞாபனம் மூலமாக முன்வைப்பதற்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான முஸ்லிம் புத்திஜீவிகள் அரசியல் குழுவுடனான இந்த அரசியல் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக 1981ல் முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழ்ந்த அம்பாறை மாவட்டத்திற்கான மாவட்ட சபைத் தேர்தலின்போது மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் கேட்டும் வழங்கப்படாத முஸ்லிம் வேட்பாளர் நியமனத்தை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாண சபைத் தேர்தலின்போது வழங்குவதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இதனையெல்லாம் கடந்த காலத்தில்; தமிழ் – முஸ்லிம் அரசியல் உறவு துண்டித்துப் போவதற்கு தமிழர் தரப்பில் நிகழ்ந்த தவறுகளைத் திருத்திக் கொள்ளும் முன்மாதிரியான செயற்பாடுகளாகவே எம்மால் பார்க்க முடிகின்றது. இவ்வாறான பரந்த பார்வையையும் சமூக உணர்வையும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் வளர்த்தெடுப்பதின் ஊடாகவே வட மாகாண முஸ்லிம் சமூகத்தின் முறையான மீள்குடியேற்றம் இருப்பு பாதுகாப்பு வாழ்வாதாரம் அரசியல் உரிமைகள் என்பவற்றையெல்லாம் எதிர்காலத்தில் சிறப்பாகப் பேண முடியும்.
வெறும் அரசியல் அதிகார பலத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சமகால மீள் குடியேற்றம் இருப்பு வாழ்வாதாரம் என்பவற்றையெல்லாம் என்றென்றும் படைபலங்களின் பாதுகாப்புடனும் அரசியல் செல்வாக்குடனும்தான் அச்சம் பீதிகளுக்கு மத்தியில் தற்காலிகமாகத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அது நிரந்தரமான நிலையான சகோதர சமூகமும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு வழங்குகின்ற தீர்வாக ஒரு போதும் இருக்காது.
அடிக்கடி இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுவதையும் அதனைத் தாங்களே தீர்த்து வைப்பதாகவும் காட்டிக் கொள்கின்ற சுயநல இலாபங்களுடனான அரசியல் வியாபாரங்களே இன்று நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளால் வடக்கில் மாத்திரமன்றி கிழக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருபத்தைந்து வருடங்களாகவே அரசியல் அதிகாரங்களில் இருந்து வருகின்ற முஸ்லிம் பிரதியமைச்சராலும் அவரது கட்சித் தலைமையினாலும் இன்னமும் அவரது பிறந்த ஊரின் எல்லைகளைக்கூடக் கண்டறிந்து அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முடியாதிருக்கும்போது எவ்வாறு வடக்கில் யுத்தத்தினாலும் விரட்டியடிப்புக்களாலும் அச்சம் பயத்தினாலும் அள்ளுண்டு இடம்பெயர்ந்து சென்ற முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு நிரந்தரத் தீர்வுகளை ஏற்படுத்த முடியும்?
எனவே இன முரண்பாடு என்பது ஆயதப் போராட்ட காலப் பயங்கரவாதத்தையும் மிஞ்சிய அச்ச உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய ஆபத்தானதாகும். அதற்குப் பரிகாரமாகவுள்ள ஒரே வழிபிணக்கிலிருக்கும் இனங்களுக்கிடையில் நிலையான இணக்கப்பாட்டையும் பரஸ்பர நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தி ஜனநாயக வழியில் ஒன்றிணைந்து செயற்படுவதேயாகும்.
இத்தகைய ஒரு பாரிய முயற்சியை தமிழர் தரப்புடன் மேற்கொள்வதற்கு முன்வந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தையும் அதன் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பையும் பொட்டணி வியாபாரிகளாக விமர்சித்திருப்பதானது வடபுலத்தில் மூவின மக்களுக்கும் மத்தியில் இன நல்லுறவை ஏற்படுத்த முன்னின்றுழைக்கும் ஒரு அமைப்பின் தலைமைக்கு உரிய உகந்த உயர்ந்த பண்பாக இருக்க முடியாது.
இவர்கள் வடபுலத்திற்கு தங்களின் துணிமணிகளை விற்றுப் பிழைப்பு நடாத்த வரவில்லை என்பதையும் அம்மாகாணத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அழுக்குத் துணிகளை சலவை செய்து புதுப்பித்துக் கொடுக்கின்ற ஒரு நல்ல முன்மாதிரியான பணியைச் செய்யவே வந்திருக்கின்றனர் என்பதையும் வடக்கு மாகாண முஸ்லிம் சமூகமும் புத்திஜீவிகளும் சமூகப் பொறுப்புடன் புரிந்து கொண்டு வரவேற்க வேண்டும்.
வடபுலத் தமிழர் தரப்புடன் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்க வந்துள்ளனர் என்ற பார்வையை விடவும் அவர்களுடன் முஸ்லிம்களைக் கூட்டி வைத்து ஒன்றாக அமரச் செய்து அவர்களுக்கிடையே இருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளைப்பற்றியும் முகத்துக்கு முகம் பேசித் தீர்வுகளைக் காண்பதற்கான நல்லெண்ண ஏற்பாட்டுக் குழுவினராகவே இந்த முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பினர் வடபுலத்திற்கு வந்துள்ளனர் என்று பார்ப்பது இஸ்லாமியக் கண்ணோட்டத்திலும் உயர்வானதாகும்.
எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மறுசீரமைப்புக்காகவும் நிம்மதியான இருப்புக்காகவும் எதிர்கால சந்ததிகளின் சுபீட்சத்திற்காகவும் இவ்வாறான சலவைத் தொழிலாளிகளாக செயற்பட முன்வருவோரையிட்டு நாம் பெருமைப்பட வேண்டுமேயன்றி காழ்ப்புணர்ச்சி கொள்ளக்கூடாது. வன்னி மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவராகவிருக்கின்ற சகோதரர் அப்துல் பாரி அவர்களும் அம்மாவட்டத்திலுள்ள தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்களின் மனங்களைத் தூய்மைப்படுத்தி மக்களுக்கு விசுவாசமான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் இவர்களோடு இணைந்து ‘சமூகச் சலவை’ச் செயற்பாட்டில் பங்கேற்பதற்கு முன்வர வேண்டும்.
-JaffnaMuslim-