.jpg)
ஏனெனில் மேற்படித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையைக் காட்டும் ஒரு தேர்தலாக இருப்பதால் இதன் மூலம் இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கும் இஸ்லாத்திற்கும் இழைக்கப்பட்ட துன்பங்களுக்கு பாடம் புகட்டவேண்டிய ஒரு தேர்தலாகவே இது அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேசமும் கவனம் செலுத்தியுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் தமது வாக்குப் பலத்தைக் காட்டி ஒரு உறுதியான தலைமைத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய தருணமாகவும் வடமாகாண சபைத் தேர்தல் விளங்குகின்றது.
இந்த நிலைமையில் வடமாகாண முஸ்லிம்கள் இன்று மேற்படித் தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதுடன் ஒரு ஸ்திரமான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது.
வடமாகாணத்தில் கடந்த காலங்களில் பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் அல்லது ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அல்லது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளை அதிகம் ஆதரித்தவர்களாக முஸ்லிம் மக்கள் இருந்துள்ளனர்.
இதற்குக் காரணம் தாம் தெரிவுசெய்யும் கட்சிகள் மூலம் தமது தேவைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்காகவும் தமது பாதுகாப்பையும், இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக வைத்து மக்கள் தமது வாக்குகளை வழங்கினர்.
இவ்வாறான வாக்குகளை பெறுவதற்காக பல அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் பல வாக்குறுதிகளை வழங்கி தாம் ஆட்சிக்கு வந்தால் மக்களது பிரச்சினைகளை நிறைவேற்றுவோம் என்ற வாதங்கள் தேர்தல் கால வாக்குறுதிகாளாக மட்டும் தாராளமாக காணப்பட்டது. எனினும் அவை ஓட்டு மொத்தமாக மக்களை ஏமாற்றிய வரலாறுகளே அதிகம் காணப்படுகின்றது.
மேற்படி நிலைமைகளுக்கு மத்தியில் தற்போது மக்கள் எதிர் கொள்ளவுள்ள வடமாகாண சபை தேர்தலில் கடந்த காலங்களைப்போல் மேற்படி இரு கட்சிகளும் தமது தந்துரோபாயங்களை மேற் கொண்டு வருவதாக புத்தி ஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்படிக் கட்சிகளால் முஸ்லிம் மக்களுக்கு மேற் கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் விடயத்தில் மக்கள் மிக அவதானத்துடனும், விழிப்புடனும் இருக்கின்றனர்.
மேற்படி இரு கட்சிகளும் தாம் எவ்வாறு மக்கள் முன் தமது முகத்தை காட்டவுள்ளனர்? இவர்களின் மக்கள் சேவையும், சமயத்தைப் பாதுகாப்பதற்கான கைங்கரியமும் அண்மைக்காலமாக இஸ்லாத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளுக்கு எவ்வாறு முகம் கொடுத்தார்கள் என்பது வெளிப்படையானதொரு விடயமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
அரசுடன் சேருவது அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இருந்தாலும் தமது சமயத்திற்கு எதிர்ப்புகளும், தடைகளும் வரும்போது அதற்காக குரல் கொடுக்க தயங்கக் கூடாது ஏனெனில் மக்களின் வாக்குகள்தான் அவர்களை ஆட்சியின் பங்காளர்களாக மாற்றினார்கள் என்பதை யாரும் கூறத் தேவையில்லை. இவ்வாறு மக்கள் வாக்குகளால் வந்தவர்கள் மக்களின் உணர்வுகளையும், சமயத்தையும் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அதற்குப் பின்னர்தான் அரசியலும், ஆட்சியாளர்களை ஆதரிப்பதுமான விடயங்களில் ஈடுபடவேண்டும்.
அரசுடன் இருக்கும் எந்தவொரு அரசியல்வாதியும் சமயம் என்ற ரீதியில் இடம்பெற்ற அநியாயங்களுக்கும், அராஜகங்களுக்கும் காட்டமான அறிக்கைகளையோ அல்லது கருத்துக்களையோ வெளியிடாது பூனைபோல் பதுங்கியிருந்த ஒவ்வொரு நிமிடங்களும் முஸ்லிம் மக்களுக்கு மரணத் தருவாயாகவே இருந்தது.
அந்தளவுக்கு மக்கள் கண்ணீரும், கவலையுடனுமே ஏக்கத்தில் இருந்தனர். ஒரு அரசியல் வாதியாவது மக்களின் கவலையை போக்கும் விதத்தில் கருத்துக்களை முன்வைக்க வரவில்லை என்பதே முக்கிய விடயமாகும். அவ்வாறு வந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் அவர்களை தலையில் தூக்கி வைத்து ஊர்வலம் செல்வர் அல்லவா?.
இந்த நிலைமைகளிலும் எந்தவிதமான பாதுகாப்போ அல்லது ஆதரவோ இல்லாத சமயத்தைப் பாதுகாக்கவேண்டும் என்று குரல் கொடுத்து முன் நின்றவர்களின் குரல்கள் தற்போது ஒடுக்கப்பட்டிக்கின்றது இவ்வாறனவர்களுக்கே மக்கள் ஆதரவு வழங்கும் நிலைமை மட்டுமல்ல கடமையுமாகவே அமைந்துள்ளது.
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நேசிக்கும் ஒவ்வொரு உள்ளங்களும் சமயத்தின் அழிவுக்கான நிலைமைகளில் அதனை பாதுகாக்க தமது உயிரையும், குடும்பத்தையும் துச்சமென நினைத்து குரல் கொடுத்த அந்த நல் உள்ளங்களையல்லவா ஆதரிக்கவேண்டும்.
இன்று முஸ்லிம் மக்கள் சமயத்தினூடாகவே தமது ஆட்சி அதிகாரங்களை அமைப்பதற்கான வழி வகைகளை நோக்கவேண்டும். இதற்காக தூர நோக்குடனான நல்ல சிந்தனைகளும் அதற்கான புத்தி ஜீவிகளும் இணைந்து சமயத்தைப் பாதுகாக்கும் அரசியலுக்கு விலைபோகாத திடமான ஒரு புதிய தலைமைத்துவம் வடமாகாண சபையில் எற்படுத்தப்படுவதையே மக்கள் விரும்புகின்றனர்.
இதுவரை காலமும் தம்மைப் பாதுகாக்கும் அரசியல் தலைமைத்துவங்களை நம்பியதானது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான். எனவே வடமாகாண சபைத் தேர்தலிலாவது ஒரு திடமான முஸ்லிம் தலைமைத்துவத்தின் தேவைப்பாடு அனைவராலும் தற்போது அவசரமாக உணரப்பட்டுள்ளது.
வடமாகாணத்தைப் பொருத்தமட்டில் கடந்த கால யுத்தத்தால் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் பல்வேறுபட்ட அழிவுகளை கண்டதொரு பிரதேசமாகும். இந்தவகையில் பார்க்கும்போது ஒரு திடமான தமைத்துவத்தின் மூலம் தேர்தலில் வெற்றி கொண்டு யுத்த அழிவின் பின்னரான அபிவிருத்திக்கு வழி சமைக்கவேண்டிய காலமும் வந்தள்ளது.
இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் மட்டும்தான் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர் ஏனைய 7 மாகாணங்களிலும் பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழுகின்றனர். இந்தவகையில் தமது தேர்தல் வெற்றி என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவேயுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் பங்கு போடுவதற்காக பல்வேறுபட்ட கட்சிகளும், குழுக்களும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை குழப்பும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த தந்ரோபாய நடவடிக்கைகளில் இருந்து முஸ்லிம் மக்கள் அவதானத்துடன் இருத்தலே முக்கியமானது என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நீண்ட தஸாப்தத்திற்குப் பின்னர் வடமாகாண மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கவிருக்கும் இவ்வேளையில் மக்களை குழப்பி அவர்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் விடயங்களை தவிர்த்து அம்மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான வாய்ப்பை சர்வதேசத்தின் கண்காணிப்புடன் மேற் கொள்ளப்பட வேண்டும் என வடமாகாண மக்கள் விரும்புகின்றனர்.
உண்மையில் மக்களின் விருப்புகளை அரசாங்கம் ஜனநாயக நாடு என்ற வகையில் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது முக்கியமான விடயமாக நோக்கப்படுகின்றது.
இன்று வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதை சிலர் விருப்பாது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல் அதனை குழப்பி மேலும் மேலும் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதியற்ற தன்மைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடமாகண முஸ்லிம் மக்கள் கடந்த கால யுத்த சூழ் நிலையின்போது இழந்த இழப்புக்களை விட அண்மைக்காலமாக இஸ்லாத்திற்கு எதிராக இனவாதிகளால் மேற் கொள்ளப்பட்ட அநியாயங்களால் பண்மடங்குகள் அதிகமானது மட்டுமல்லாது மனங்களை புண்படுத்திய விடயமுமாகும் என்பதே முஸ்லிங்களின் வரலாற்று உண்மையாக தோற்றம் பெற்றுள்ளது.
எனவே மேற்படி விடயங்களை நோக்கும்போது முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளாலும்,அரசியல்வாதிகளாலும் தாராளமாக ஏமாற்றப்பட்டுள்ளதுடன். யுத்தத்திற்குப் பின்னரான காலத்திலும் கூட எதுவித முன்னேற்றம் காணப்படாதவர்களாகவும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு சமுகமாக தோற்றம் பெற்றுள்ளதை இன்று நிஜத்தில் காணக் கூடிய துர்ப்பாக்கிய நிலையில் வடமாகாண முஸ்லிம் மக்கள் காணப்படுகின்றனர்.
நன்றி MMC