Friday, July 12, 2013

வடமேல் மாகாணசபையில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்கள் இன்று தெரிவு

புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நகர அமைப்பாளரும் புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு தலைவருமான ஏ.என்.எம். ஜௌபர் மரைக்கார் தெரிவித்தார். இக்கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜௌபர் மரைக்கார்;
செம்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபை தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளது. ஸ்ரீலங்கா தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மாகாண சபைக்காக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிவுள்ள 19 வேட்பாளர்கள் இன்று நடைபெறவுள்ள மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளனர். இளம் சட்டத்தரணி உட்பட பலர் வடமேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸில் சார்பில் போட்டியிட தயாராகவுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதேவேளை வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ. எஹியா வடமேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மற்றுமொரு வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரான எஸ்.எச்.எம். நியாஸ் வடமேல் மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடவுள்ளார் என்றும் அறிய முடிகின்றது. ஜௌபர் மரைக்காரும் வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.