Wednesday, September 5, 2012

மறுச்சிக்கட்டி கிராம முஸ்ஸிம் மக்களின் குடிசைகள் தீ வைப்பு சம்பவம்: த.தே.கூ கண்டனம்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட மறுச்சிக்கட்டி மறைக்கார் நகர் கிராமத்தில் மீள் குடியேறிய முஸ்ஸம் மக்களின் குடிசைகள் தீ வைத்து எறியூட்டப்பட்ட சம்பவம் அந்த மக்களை மீண்டும் ஒரு இடப்பெயர்விற்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயலாக காணப்படுவதாகவும் குறித்த நாசகாரியச் செயலுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

'நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வந்த தமிழ் முஸ்ஸிம் மக்கள் இடம்பெயர்ந்து புத்தளம் மற்றும் கற்பிட்டி போன்ற இடங்களில் வாழ்ந்து வந்தனர். பின் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவர்கள் மீள் குடியேற ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் மறுச்சிக்கட்டி, மறைக்கார் நகர் கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்ஸிம் மக்கள் மீண்டும் தமது கிராமத்தில் குடியமர்ந்தனர். இதன் போது இந்த மக்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில் குறித்த மக்களின் தற்காலிக குடிசைகளை கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் அப்பகுதிக்கு வந்த சுமார் 70இற்கும் மேற்பட்ட கடற்படையினர் குறித்த தற்காலிக வீடுகளை உடைத்து சேதப்படுத்தியதோடு ஏனைய வீடுகளுக்கு தீ வைத்து கொழுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுமார் 21 குடும்பங்கள் வரை தமது இருப்பிடங்களை இழந்த நிலையில் உள்ளனர். குறித்த சம்பவத்தில் கடற்படையினரே ஈடுபட்டதாக குறித்த முஸ்ஸிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்று மீண்டும் தமது சொந்த மண்ணில் குடியமர பல்வேறு சிரமங்களையும் எதிர்க்கொண்டு இந்த முஸ்ஸிம் மக்கள் தமது சொந்த கிராமத்தில் தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்த போதும் குறித்த சம்பவம் மேலும் அவர்களுக்கு ஒரு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த முஸ்ஸிம் மக்களின் வீடுகள் தீ வைத்த சம்பவம் மற்றும் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கான இடங்கள் எவையும் இல்லை என திட்டவட்டமாக தெரிகின்றது.

எனவே அரசாங்க தரப்புடன் இருக்கின்ற எவராக இருந்தாலும் சரி அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்தால் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து ஒருமித்து செயற்பட தயாராக உள்ளது.

எனவே குறித்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் துரித விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதோடு குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு குறித்த சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.