Friday, February 19, 2016

பாத்திமா ஸஹ்ரா மன்சூர் மரபணு புனராக்கம் மருத்துவத் துறையில் இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் முதுமாணி கற்கை நெறியை பூர்த்தி செய்து வரும் பாத்திமா ஸஹ்ரா மன்சூர் மரபணு புனராக்கம் மருத்துவத் துறையில் இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டுள்ளது.


இலங்கையில் அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு துறையான இத்துறையில் இவர் செய்த ஆய்வுக் கட்டுரைத் தலைப்பில் சர்வதேச ரீதியாக பங்குபற்றியவர்களில் தெரிவு செய்யபட்ட ஆறுபேரில் ஒருவராக இலங்கையில் இருந்து ஸஹ்ராவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை நாட்டுக்கு கிடைத்துள்ள கௌரவமாகும்.

புகழ் பேட்டர அமெரிக்க மருத்துவக் கவுன்சிலுக்கான ஆறாவது சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இளம் ஆய்வாளருக்கும், விஞ்ஞானிக்குமாக கிடைத்த சிறந்தொரு அங்கீகாரமாகும்.

பலாங்கொடையைச் சேர்ந்த இவர் அட்டுழுகம ஹஸ்ஸாலி தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஜே.எம்.மன்சூர் மற்றும் பாயிஷா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியுமான இவர் தனது பி.எஸ்.சி. கற்கை நெறியை இந்தியாவின் பெங்களுர் பல்கலைக் கழகத்தில் உயிரியல் தொழிநுட்பத் துறையில் முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரின் ஆய்வுக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் அமெரிக்க பிலாதெல்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு இவர் அழைக்கப்பட்டுள்ளார். அதன்போது இவர் தனது ஆய்வுக் கட்டுரையை உத்தியோக பூர்வமாக சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவியின் திறமையைப் பாராட்டியும் அவரது ஆய்வுத் துறையில் தொடர்ந்தும் புதிய ஆய்வகளை மேற்கொள்ளும் வகையில் அதனை ஊக்குவிக்கும் முகமாக கௌரவிப்பு நிகழ்வு ஒன்றினை வாமி நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜ்மான் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன் கிழமை (17) ஏற்பாடு செய்து கௌரவித்திருந்தது.

இந்நிகழ்விற்கு துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் தூதுவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இஸ்லாமியர்களின் வரலாற்றுச் சாதனைகள் என்ற தலைப்பில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக் விஷேட உரை நிகழ்த்தினார்.

இதன்போது அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவுக்கான காசோலையை துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் தூதுவர் வழங்கியதுடன் மாணவிக்கான நினைவுச் சின்னத்தை கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக் வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.