Friday, February 19, 2016

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்களை வரவேற்று யாழ்ப்பாணம் பள்ளிவாயலில் விஷேட துஆப் பிரார்த்தனை

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்களை வரவேற்று யாழ்ப்பாணம் பள்ளிவாயலில் விஷேட துஆப் பிரார்த்தனை.

19-02-2015 அன்று வடக்கு மாகாண ஆளுனர் கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் பணிகளை சம்பிராதயபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். காலை 10;30 மணிக்கு குறித்த நிகழ்வு இடம்பெற்றது, அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கின்ற அனைத்து மத ஸ்தலங்களுக்கும் ஆளுனர் அவர்கள் விஜயம் செய்தார், அந்தவகையில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாயலுக்கும் ஆளுனர் அவர்கள் விஜயம் செய்தார்கள், அவரை யாழ் கிளிநொச்சி ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அப்துல் அஸீஸ் அவர்கள், யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் ஜமால் மொஹிதீன், மற்றும் சுவர்கஹான், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அ.அஸ்மின் ஆகியோர் வரவேற்றனர்.



முஹம்மதியா பள்ளிவாயல் பேஷ் இமாம் அவர்களால் விஷேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்வு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உலமாக்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் உரையாற்றிய கௌரவ ஆளுனர் றெஜினோல்ட் குரே அவர்கள்

பிரிவினைவாதம் எப்போது பயன்தருகின்ற ஒன்றாக இருந்ததில்லை, மாறாக அது அழிவையே தந்திருக்கின்றது, மதம் என்றும், மொழி என்று சாதி என்றும், இனம் என்றும் குலம் என்றும் நாம் பிரிந்து நிற்பதனால் எதனையும் சாதித்துவிட முடியாது. இந்த நாட்டுக்கு என்ன குறை இருக்கின்றது; எம்மைச் சூழவுள்ள கடலில் குறை இருக்கின்றதா? எமது பூமியில் குறை இருக்கின்றதா? எம்மைச் சூழவுள்ள மரங்கள் செடிகளில் குறை இருக்கின்றதா? இங்கே வாழுகின்ற மக்களில் குறைபாடுகள் இருக்கின்றதா? என்று நான் தேடிப்பார்க்கின்றேன் எதிலுமே குறைகள் கிடையாது, குறைகள் எமது உள்ளங்களிலும், எமது மனப்பாங்கிலுமே இருக்கின்றன, அதனால்தான் இந்த நாட்டிலே இவ்வளவு அழிவுகளும், நாசங்களும் நடந்தேறியிருக்கின்றன. இதற்கு ஒரு முடிவு தேவைப்படுகின்றது. அதனை நாமே உருவாக்க வேண்டும் வேறு வழிகள் கிடையாது, நாம் ஐக்கியப்படுவதும் ஒற்றுமையாக இருப்பதுமே இதற்கான தீர்வாகும்.

முஸ்லிம் நாடுகளைப் பாருங்கள், அவை தமக்குள் முரண்பட்டு சின்னாபின்னமாகியிருக்கின்றன, அவர்களுக்கு அவர்கள்தான் எதிரிகள் வேறு யாருமல்ல அதே போன்று இலங்கையர்க்கு நாமே எதிரிகளாக இருக்கின்றோம், இந்த நிலை மாற வேண்டும். இதுவே எனது பிரதான பணியாகும். மக்களை ஒருங்கிணைக்க வேண்டும், இதுதான் எனது தேவை எதிர்பார்ப்பு எல்லாமாகும். இதற்காக நீங்கள் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தோடு பணியாற்றிய பாரிய அனுபவம் எனக்கு இருக்கின்றது, அவர்கள் கல்வியில் கரிசனை காட்ட வேண்டும், இப்போது பாரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது. இதனை இங்குள்ள பிரதேசத்திலும் நான் அறிமுகம் செய்ய விரும்புகின்றேன். அதற்கும் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள், எல்லோருக்கும் சிறப்பான எதிர்காலம் அமையட்டும். என்று குறிப்பிட்டார்.