
கடந்த புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட மாநாட்டின் மூலம் இந்தக்
கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டன.
வேண்டுகோள்கள்
1. உத்தேச தேர்தல் முறை சார்ந்த
சீர்திருத்தங்களின் போது சிறுபான்மையினரின் நலன்களை கவனத்திற் கொள்ளுமாறு
இம்மாநாடு அரசாங்கத்தை வேண்டிக்கொள்கின்றது.
2. பல்லின மக்கள் வாழும் நம்நாட்டில் சமூக
நல்லிணக்கத்துக்கும் சக வாழ்வுக்கும் குந்தகம் விளைவிக்கும் எத்தகைய
முயற்சிகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் இன முரண்பாடுகளைத்
தோற்றுவிக்கும் அத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள்
இயற்றப்பட்டு அவை கண்டிப்பாக அமுல்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்த
வேண்டும் எனவும் உரிய தரப்பினரை இம்மாநாடு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றது.
3. முஸ்லிம் பாடசாலைகளில் அறபு, இஸ்லாம்
பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் உடனடியாக
ஆசிரியர் நியமனங்களை செய்யுமாறு இம்மாநாடு அரசையும் கல்வி அமைச்சரையும்
வேண்டிக் கொள்ள விரும்புகின்றது.
4. ஒப்பீட்டு ரீதியில் முஸ்லிம்கள் கல்வித்
துறையில் பின்னடைந்த சமூகமாக இருக்கின்றனர். இந்த வகையில், முஸ்லிம்
சமூகத்தின் கல்வி நிலை முன்னேற்றத்தைக் கவனத்திற் கொண்டு நாட்டிலுள்ள
முஸ்லிம் பாடசாலைகளின் உட்கட்டமைப்பையும் பௌதீக வளங்களையும் மேம்படுத்தவும்
ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அரசு ஆவன செய்ய வேண்டுமென இம்மாநாடு
வலியுறுத்தி வேண்டிக்கொள்கின்றது.
5. நடந்து முடிந்த கொடூரமான உள்நாட்டு
யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களைப் பொதுவாகவும் கடந்த இரு
தசாப்தங்களுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் மற்றும்
மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம்களை குறிப்பாகவும் சகல வசதிகளோடும் மீள்
குடியேற்றம் செய்வதில் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் உரிய
நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் இம்மாநாடு
கேட்டுக்கொள்கின்றது.