மத்திய கிழக்கின் அரசியல்
சூழமைவுகள் உருவாக்கியுள்ள பயங்கரமான சவால்களை எதிர்கொள்ளும் பொறுப்பினை
மன்னர் ஸல்மானிடம் கொடுத்து விட்டு மன்னர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸீஸ்
மரணித்துள்ளார். அதேநேரம், 2005 – 2015 வரை எண்ணை உலகின் ஜாம்பவானாக
திகழ்ந்த மன்னர் அப்துல்லாஹ்வின் கீழ் சவூதிஅரேபியாவின் ஆட்சிபுரிதல்
(Governance) பறறிய விமர்சன நோக்குகளும் ஊடக உலகை ஆக்கிரமிக்க
ஆரம்பித்துள்ளன. மேற்கத்தேய அரசியல் விமர்சகர்கள் , இடதுசாரி சிந்தனைப்
போக்கினைக் கொண்ட ஆய்வாளர்கள் மற்றும் இஸ்லாமியவாதிகள் என பலரும் மறைந்த
மன்னர் அப்துல்லாஹ்வின் நாட்குறிப்பினை மீள்வாசிப்புச் செய்யத்
துவங்கியுள்ளனர். முன்மாதிரி ஆட்சியாளர் என்ற நிலையிலிருந்து 'பயங்கரமான
சர்வதிகாரி' என்ற நிலை வரை மன்னர் அப்துல்லாஹ் பற்றிய பார்வைகள் நீண்டு
செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சகீ பாவுஸ் (நளீமி )
மன்னர் அப்துல்லாஹ 'நவீனத்துவவாதி' :
இந்தப் பின்புலத்தில் இறுகிய சிந்தனைப் பாரம்பரியத்தைக் கொண்ட சவூதி அரேபியாவை 'நவீன உலகுடன்' இணைத்து விடும் தேட்டம் மன்னர் அப்துல்லாஹ்விடம் இருந்தாக பிரபல்யமான இடதுசாரி அரசியல் விமர்சகரான அப்துல்பாரி அத்வான் குறிப்பிடுகின்றனர். எனவே, சவூதிஅரேபியாவின் அரச வம்சத்தின் 'சீர்திருத்தவாதி' (Reformist) ) என மன்னர் அப்துல்லாஹ்வை குறிப்பிட முடியாவிட்டாலும் கூட 'நவீனத்துவவாதி (Modernist ) யாக வர்ணிக்க முடியும் என அவர் குறிப்பிடுகிறார். இதற்கான சில நியாயங்களையும் அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக, நவீன தொழிநுட்பங்களை மற்றும் அறிவியல் கலைகளை கற்பதற்கான சூழலை ஏற்படுத்துவதில் சவூதிஅரேபிய அரச வம்சம் விருப்பம் காட்டியதில்லை. அரசியல் மற்றும் மார்க்கரீதியான நியாயங்களைப் பின்புலமாகக் கொண்டு நவீன தொழிநுட்ப உலகை சவூதியில் அனுமதிப்பதற்கு முன்னைய மன்னர்கள் தயங்கினர். ஆனால், நவீன தொழிநுட்ப உலகை சவூதி அரேபியா சமூகத்திற்கு மத்தியில் அறிமுகஞ் செய்வதில் மன்னர் அப்துல்லாஹ் காத்திரமான பங்கு வகித்துள்ளாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மன்னர் அப்துல்லாஹ் திறந்து வைத்த 'விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியலுக்கான மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம்' , அவரது 'நவீனத்துவ சிந்தனைக்கு' சான்றாதாரமாக முன்வைக்கப்படுகிறது.
அதேபோன்று, பெண்களின் சமூகப் பங்கேற்பு பற்றிய சவூதிஅரேபிய அரச வம்சத்தினதும், மார்க்க அறிஞர்களினதும் நிலைப்பாடு கடுமையானதாகும். இந்நிலை சவூதிஅரேபிய பெண்களினுடைய அரசியல் , கல்வி , கலாச்சார மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய நீண்ட வாதப் பிரதிவாதங்கள் சர்வதேச அளவில் கிளப்பிவிட்டன. இத்தகைய பெண்கள் தொடர்பான இறுக்கமான நிலைப்பாடுகளை தளர்த்துவதிலும், புதிய மாற்றத்தினை சவூதிஅரேபிய மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கொண்டு செல்வதிலும் மன்னர் அப்துல்லாஹ் முற்போக்காக சிந்தித்துள்ளதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வகையிலேயே சவூதிஅரேபியா சட்டவாக்க சபையான 'மஜ்லிஷூ ஷூரா' வில் 30 பெண்களை மன்னர் அப்துல்லாஹ் இடம்பெறச் செய்தார். மேலும், உள்ளுர் மட்ட தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தினை பெண்களுக்கு வழங்குவதற்கு அனுமதியளித்தார். இன்னும், புதிதாக திறக்கப்பட்ட 'விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியலுக்கான மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழகத்தில் ஆண்கள் , பெண்கள் என இருசாராரும் இணைந்து கற்பதற்கான வாய்ப்பினை வழங்கியமை உட்பட, கல்வித் தேட்டமுல்ல பெண்களை வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காக அனுப்பி வைப்பதற்கான வாயிலை திறந்து விட்டமை போன்றன திறந்த சமூகத்துடன் பெண்கள் உறவாட வேண்டும் என்ற மன்னர் அப்துல்லாஹ்வின் நிலைப்பாட்டினை அடையாளப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.
இங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பெண்களின் சமூக வகிபாகத்தை சீரமைப்பதில் அதிர்ச்சியூட்டும் பாய்ச்சலாக மன்னர் அப்துல்லாஹ்வின் சீர்திருத்தங்களை நோக்க முடியாது. ஆனால், ஏற்கனவே பல தசாப்த்த காலமாக சவூதி அரேபியாவின் மார்க்க அறிஞர்களும், அரச வம்சத்தினரும் பின்பற்றிய பெண்கள் தொடர்பான வரண்ட நிலைப்பாட்டிலிருந்து மாற்றத்தினை நோக்கிய ஒரு சில எட்டுக்களை மன்னர் அப்துல்லாஹ் எடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட முடியும்.
சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தின் உள்வீட்டு மோதல்கள் பற்றிய செய்திகள் மிகவும் குறைவாகவே வெளிவருகின்றன. அதிகாரம் , பதவி மற்றும் முதலாளித்துவ உலகை கைப்பற்றிக் கொள்வதில் போட்டி மனப்பான்மை என்பன அரச குடும்பத்தின் வழiமான நிகழ்வுகள். அதிகாரபீடங்களை தக்க வைத்துக் கொள்வதில் ஏற்படும் மோதல்கள் அரசவம்சத்தை பலவீனப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக மன்னர் அப்துல்லாஹ் பைஆத் சபை ஒன்றை ஆரம்பித்து வைத்தார். அதனை அரச வம்சத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகார பிரச்சினைகளை தீர்த்துக் கொள்தவற்கான களமாக மாற்றியமைத்தார்.
மாத்திரமன்றி, அரச குடும்பத்தின் ஊழல்கள் விடயத்தில் முன்னைய மன்னர்களை விட சற்று கடுமையாக நடந்து கொண்டவராக மன்னர் அப்துல்லாஹ்வை நினைவு கூறலாம் என சில ஊடகவியாளர்கள் கருதுகின்றனர். அதிலும் ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ரியாத் நகர அபிவிருக்தி செயற்திட்டத்துடன் தொடர்புடைய ஊழல் நிறைந்த உடன்படிக்கைகளை இரத்துச் செய்வதில் மன்னர் அப்துல்லாஹ் நேரடியாக தலையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையும் சில அறிஞர்கள் மன்னர் அப்துல்லாஹ்வின் சாதனையாகவே நோக்குகின்றனர்.
இவ்வாறு , 2005 முதல் 2015 வரை இடம்பெற்ற விரல்விட்டு எண்ணக் கூடிய சில சீர்திருத்த எட்டுக்கள் முழுமையாக மன்னர் அப்துல்லாஹ்வின் சீர்திருத்த சிந்தனையின் வெளிப்பாடு எனக் கூற முடியாது என்றும் வேறு சில அரசியல் ஆய்வாளர்கள் வாதிக்கின்றனர். குறிப்பாக பிரபல்யமான 'Democracy now' தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் 'மத்திய கிழக்கு பிராந்தியத்தினை சூழ நிகழ்ந்த சடுதியான மாற்றங்களும் , எதிர்பாராத நிகழ்வுகளும் மற்றும் அரபு வசந்தமுமே மன்னர் அப்துல்லாஹ்வை சில சீர்திருத்தங்களை சாத்தியமாக்குதனை நோக்கி இட்டுச் சென்றன. அவ்வாறில்லாமல், சவூதிஅரேபியாவின் இறுக்கான கொள்கை மாற்றங்களல்ல' என அழுத்தமாக வலியுறுத்தப்பட்டன.
மன்னர் அப்துல்லாஹ்வும் , உள்நாட்டு அரசியல் அடக்குமுறைகளும் :
கடந்த ஒரு தசாப்த்த ஆட்சிக் காலங்களுக்குல் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அரசியல் எதிரிகளுக்கெதிரான அடக்குமுறைகள் , சுதந்திர ஊடக செயற்பாடுகள் மீதான கெடுபிடிகள் மற்றும் வழங்கப்பட்ட வரையறையைத் தாண்டிச் செல்ல முற்பட்ட பெண்கள் மீது விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைகள் என்பன மன்னர் அப்துல்லாஹ்வின் அரசியலினுடைய கருப்புப் பக்களை விவரிக்கிறது. உண்மையில் அரசியல் அடக்குமுறை என்பது மன்னர் அப்துல்லாஹ்வுக்கு மாத்திரம் உரிய விடயமல்ல. அதிகாரங்கள் குவிந்துள்ள பதவிகளை ஆளும் அனைவர்களும் இதனைக் கையால்வார்கள். இந்த பொது விதி மன்னர் அப்துல்லாஹ்விலும் செயற்பட்டிருக்கிறது.
இந்தப் பின்புலத்திலேயே சில அரசியல் விற்பன்னர்கள் 'மன்னர் அப்துல்லாஹ் பயங்கர சர்வதிகாரி' என வர்ணிக்கின்றனர். சவூதி அரேபியாவிற்குல் 'அரசியல் சுதந்திரம்' என்ற வார்த்தைக்கே மன்னர் அப்துல்லாஹ் இடம் வைக்கவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஜனநாயகம் பற்றிப் பேசுவது மற்றும் அதன் கூறுகளாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பகிஷ்கரிப்புகளில் ஈடுபடுவது என்பன மிகவும் கடுமையாக தடை செய்யப்பட்ட ஆட்சிகாலப்பிரிவாக மன்னர் அப்துல்லாஹ்வின் பத்தாண்டுகளை சுட்டிக்காட்டலாம்.
இன்னும், அரசியல் எதிரிகளை அடக்கி மன்னராட்சியை பாதுகாத்துக் கொள்வதற்கான கருவியாக 'கடுமையான மார்க்க நிலைப்பாடுகளை' பயன்படுத்திக் கொள்வது சவூதிஅரேபிய அரசியல் கலாச்சாரத்தின் ஆணிவேராகும். இன்னுமின்னும் இவ்வாணி வேரை பலப்படுத்தும் கைங்கரியத்தினை செய்தாரே ஒழிய அதனை மீள்வாசிப்புப் செய்யும் மன்னராக அப்துல்லாஹ் இருக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. இந்த வகையில், ஒரு விதிவிலக்கான அரசியல் நடைமுறையை ஏற்படுத்தி விட்டுச் சென்ற மன்னராக வரலாறு அவரை நினைவு கூறப்போவதுமில்லை.
மன்னர் அப்துல்லாஹ்வின் வெளிநாட்டுக் கொள்கைகள் மீதான விமர்சனங்கள் :
மன்னர் அப்துல்லாஹ்வின் அரசியல் காய்நகர்த்தல்கள் விமர்சிக்கப்படும் இரண்டாவது தளம் அவரது வெளிநாட்டுக் கொள்கைகளாகும். சவூதி அரேபியாவின் அரசியல் செல்வாக்கினையும் , அதிகார வீச்சினையும் பலப்படுத்துவதிலும் , பரலவாக்குவதிலும் மன்னன் அப்துல்லாஹ்வின் வெளிநாட்டுக் கொள்கை ஓரளவு வெற்றியடைந்திருக்கிறது. ஆனால், தனது நாட்டிற்கு சவாலாக அமையலாம் எனக் கருதும் அயல் நாடுகளின் ஜனநாயக மாற்றங்களை அடித்து நொறுக்கும் மிக மோசமன செயற்திட்டங்களை மன்னர் அப்துல்லாஹ் நிறைவேற்றி முடித்திருக்கிறார். எகிப்தில் ஜனாதிபதி கலாநிதி முர்ஸியின் அரசாங்கத்திற்கு எதிரான இராணுவப் புரட்சிக்கு தூபமிட்டது முதல் அதனை கச்சிதமாக சாதித்து முடிக்கும் வரையான அனைத்து நகர்வுகளும் மன்னர் அப்துல்லாஹ்வின் கண்காணிப்பிலேயே நடைபெற்றன. எந்தளவுக்கெனில், மிக ஆரம்பத்தில் அமெரிக்கா , இஸ்ரேல் மற்றும் ஜரோப்பிய யூனியன் என்பன எகிப்தின் இஸ்லாமியவாதிகளை வீழ்த்துவதற்கான சாணக்கியமான தெரிவாக இராணுவப் புரட்சியை கருதவில்லை. என்றாலும், மன்னர் அப்துல்லாஹ்வின் அவசரத்தின் பெயரிலேயே 'எகிப்திய இராணுவப் புரட்சி' இடம்பெற்றதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில், எகிப்திய ஜனநாயகத்தினை வீழ்த்துவதில் மன்னர் அப்துல்லாஹ்வின் வகிபாகத்தினை நிலையான காட்சிகளாக முஸ்லீம்கள் தங்களது உள்ளங்களில் பதிவு செய்து விட்டார்கள். எகிப்திய இராணுவப் புரட்சி ஏற்படுத்திய அதிர்வலைகளின் விளைவாக சிரியா , ஈராக் , யெமன் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் மக்கள் மேற்கொண்ட எழுச்சிப் பேரலைகளும் கூட எரிந்து சாம்பலாகின. சுருக்கமாக அரபு வசந்ததிற்கு மன்னர் அப்துல்லாஹ் செய்த வரலாற்றுத் துரோகத்தினை எந்த நியாயத்தின் அடிப்படையிலும் இஸ்லாமியவாதிகளோ, லிபரல்வாதிகளோ அல்லது இடதுசாரிகளோ அங்கிரிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.
அடுத்து மன்னர் அப்துல்லாஹ் விமர்சிக்கப்படும் மிக முக்கியமான அம்சம் 'பலஸ்தீன விவகாரம்' துடன் தொடர்புபட்டதாகும். இது பற்றி இலண்டனில் வசிக்கும் பலஸ்தீன ஊடகவியளாளரான அப்துல்பாரி அத்வான் எழுதும் போது 'செப்டம்பர் 11 தாக்குதல்களில் சில சவூதி அரேபிய பிரஜைகள் பங்கொண்டார்கள் என அமெரிக்க உளவுப்பிரிவு தெரிவித்தன. இதனால், அமெரிக்க-சவூதிஅரேபிய உறவில் சற்று தளர்ச்சி ஏற்பட்டது. இதனை சீர்செய்தவற்காக பலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு சார்பாக பல விட்டுக் கொடுப்புக்களை மன்னர் அப்துல்லாஹ் செய்திருக்கிறார். இதனுடாக அரபுத்துவத்தின் அடிப்படைகளிலேயே மன்னர் அப்துல்லாஹ்வின் அரசாங்கம் கைவைத்து விட்டது' என குற்றம் சாட்டுகிறார்.
இதனோடிணைந்த வகையில், கடந்த வருடம் இடம்பெற்ற காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஒரு கண்டனத்தையேனும் தெரிவிக்காமல் மௌனம் காத்தமை மன்னர் அப்துல்லாஹ் மீதிருந்த முஸ்லீம் உலகின் எச்சசொச்ச மதிப்பையும் நீங்கிவிட்டது. இந்நிகழ்வின் போது முஸ்லீம் உலகின் உளக் குமுறல் எல்லை தாண்டிச் சென்று 'அரபு ஸியோனிஸிட்' என பெயர் சூட்டப்படும் அளவுக்கு மன்னர் அப்துல்லாஹ் விமர்சிக்கப்பட்டார். மன்னர் அப்துல்லாஹ்வின் அரசியல் வாழ்க்கையை வாசிப்புச் செய்யும் சாதாரண அரபியன் எவனும் இதனை ஞாபகப்படுத்தமால் இருக்கமாட்டான்.
மன்னர் அப்துல்லாஹ்வின் வெளிநாட்டுக் கொள்கை விமர்சிக்கப்படும் மூன்றாவது அம்சம் 'சிரியா விவகாரம்' உடன் சம்பந்தப்பட்டது. அதாவது, 'ஸூன்னி இஸ்லாம்' வாதத்தினை அரசியல் கருவியாக பயன்படுத்தி பிராந்திய பிளவுவினை ஆழப்படுத்தும் வெளிநாட்டுக் கொள்கையை மன்னர் அப்துல்லாஹ் பின்பற்றியதாக அரசியல் நோக்கர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இன்னும், 8 வலைகுடா நாடுகளுக்கு தலைமை தாங்கிய நிலையில் மற்றும் அமெரிக்காவுடனான ஆத்மார்த்த உறவினை பேணிய நிலையிலும் ஈரானின் வரட்டு அகம்பாவத்தினை அடக்கி சர்வதிகாரி அஸதை வீழ்த்துவதற்கான எந்த இராஜதந்திர பிரயத்தனங்களையும் மன்னர் அப்துல்லாஹ் மேற்கொள்ளவில்லை என்பது அரசியல் கண்கொண்டு நோக்குமிடத்து ஒரு குறைபாடே.
அதுமாத்திரமன்றி, லிபியாவின் ஆட்சிமாற்றத்தினை குழப்பியமை , டியூனீசிய மதச்சார்பற்ற குழுக்களுக்கு பணவுதவி அளித்தமை , யமனின் இஸ்லாமியவாதிகளை வீழ்த்துவதற்காக ஸைதி ஷீயாப் பிரிவினர்களுடன் இணைந்து சூழ்ச்சி செய்தமை என்பன மன்னர் அப்துல்லாஹ் மீது அள்ளி வீசப்படும் பாரதூரமான விமர்சனங்களாகும்.
இவ்வாறுதான் மன்னர் அப்துல்லாஹ்வின் நாட்குறிப்பை வாசித்த பலரின் விமர்சனங்கள் 'நவீனத்துவாதி' என்ற நிலையிலிருந்து 'பயங்கர ஜனநாயாக விரோதி' என்ற நிலை வரை நீண்டு செல்கிறது. என்றாலும், இஸ்லாத்தின் இரண்டு புனித மஸ்ஜிதுகளினதும் பாதுகாவலர் என்ற உயர்பட்டத்தினை சுமந்து கொண்டு இத்தகைய முஸ்லீம் சமூக விரோத வெளிநாட்டுக் கொள்கைகயை மன்னர் அப்துல்லாஹ் பின்பற்றியமையை பலரது உள்ளங்களும் ஏற்க தயங்குகிறது.
மறைந்த மன்னர் அப்துல்லாஹ்வின் மீதான குற்றச்சாட்டுகளை முஸ்லீம் உம்மா மறக்க வேண்டுமாக இருந்தால் , சவூதி அரேபிய அரச குடும்பத்திற்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் காத்திருக்கிறது. அதுவே, தேசத்திலும் , பிராந்தியத்திலும் 'நல்லாட்சியை' ஏற்படுத்துவதில் மன்னார் ஸல்மானுக்கு ஒத்துழைப்பதாகும். மேலும், நடுநிலை இஸ்லாமிய இயக்கங்கள் , நிறுவனங்கள், புத்திஜீவிகள் , சிந்தனையாளர்கள் போன்றவற்றினை அங்கீகரிப்பதுடன், ஷீயா - ஸூன்னி கொள்கை மோதல்களுக்கு அப்பால் நின்று மத்திய கிழக்கினை புதிய திசைவழியில் செலுத்தும் வகையில் வியூகங்களை வகுப்பதற்கு துணை செய்தவாகும். முஸ்லீம் உலகின் பொருளாதார வளத்தினை ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்குதவதற்கு கடனாகக் கொடுக்காமல் , உம்மாவின் அரசியல் , பொருளாதார , சிந்தனா எழுச்சிக்கு முதலீடு செய்வதாகும். இவற்றை மன்னர் ஸல்மான் உத்தரவாதப்படுத்தினால், சிலவேளை அரேபிய மன்னர்களை முஸ்லீம் உம்மா மன்னித்துவிடலாம்.