அண்மைகாலமாக இந்நாட்டில் சிறுபான்மையினரை
குறிவைத்து சிலாகித்துப் பேசப்பட்டுவந்த பொதுபலசேனா மற்றும் ராவணா பலய
அமைப்பினருக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையானது புயலாக வெடிக்கும் காலம்
நெருங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. ஒருபிரிவினர் ஆதரவு தெரிவிக்க மற்றொரு
பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தமையினால் இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள
பிணக்குள் வெடிக்கும் நிலை தோற்றம் பெற்றுள்ளதாகவும், தங்களுக்கிடையிலான
சில பிரச்சினைகளை கையாள்வதில் ஆத்திரமும், அவசரமும் இவர்களிடம்
குடிகொண்டுள்ளமை நிலைமைய மேலும் சிக்கலாக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
குறித்த பொலிஸ் பிரிவிற்கு முஸ்லிம்கள்
தற்போது பல முறைப்பாடுகளை செய்துள்ளதாக தமக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும்
முறைப்பாடுகள் அடங்கிய கோவைகளை ஜெனீவாவிற்கு எடுத்துச் செல்வதே அவர்களின்
அடுத்து திட்டம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத விவகாரங்களை ஆராய
விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டமை அடிப்படைவாதிகள் மற்றும்
ஏகாதிபத்தியவாதிகளின் சதியாக இருக்கலாம் எனவும் தவாறன தகவல்களை வழங்கி
ஜனாதிபதியை சிலர் திசை திருப்பியுள்ளதாகவும் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர்
தெரிவித்திருந்தார். எனினும் விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டமை தங்களது
அழுத்தத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி என பொது பல சேனா அமைப்பின் பொதுச்
செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதன்மூலம் குறித்த பொலிஸ் பிரிவிற்கு
ஆதரவினை கலபொல அத்தே ஞானசார தேரரின் வாதமாகும். ஆனால் இந்நிலையில் மற்றொரு
பௌத்த அமைப்பான ராவணா பலய விசேட பொலிஸ் பிரிவிற்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ளமையானது இவர்களுக்குள் பெரும் குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. எனினும் விசேட பொலிஸ் பிரிவு நீண்ட
காலம் செயற்படுமா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள பொது பல சேனா
அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், குறைந்தது இரண்டு வருடங்களாவது குறித்த
பொலிஸ் பிரிவு செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் இத்தேகந்த
சத்தாதிஸ்ஸ தேரர் யாருடைய பணிப்பின் கீழ் இவ்வாறு செயற்படுகிறார் என
ஆராயவுள்ளதாகவும் ராவணா பலய அமைப்புடன் இது குறித்து கலந்துரையாடி
தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக இரு அமைப்பினர்களுக்கிடையில் ஒரு வகையான சந்தேகப் பார்வை
வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் இந்நாட்டு
பேரினவாதிகளில் சில பிரிவினர் பிரிவினை ஏற்படுத்திக் கொண்டு மதரீதியான
பிளவுகளை ஏற்படுத்தி வருகின்ற அமைப்பினர்களுக்கும், இதனை பார்த்துக்
கொண்டிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் தலைகுணிவை ஏற்படுத்தி அரசுடன் ஒட்டிக்
கொண்டிருக்கும் முஸ்லிம்; தலைமைகளை விரட்டவும், அரசிற்கு இந்நாட்டு
முஸ்லிம்களின் புலம் பெயர் சக்திகளை வெளிக்காண்பிக்கவும் கடந்த வாரத்தில்
லண்டன் மாநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும்
கூறப்படுகின்றது.
இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை
இனங்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல்
நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, பிரிட்டனில் வாழும் முஸ்லிம்களால் ஒரு
கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இலங்கை முஸ்லிம் புலம்பெயர்
அமைப்பு என்ற இயக்கத்தின் தலைமையில், பல சிவில் அமைப்புக்கள் இணைந்து
ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்
கலந்துகொண்டார்கள். பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக கோசமிட்டு
ஆர்பாட்டை ஆரம்பித்த முஸ்லிம்கள், அங்கிருந்து ஊர்வலமாக இலங்கை தூதரகத்தை
நோக்கிச் சென்றனர்.
அதேவேளை, இந்த போராட்டத்துக்கும் தமக்கு
எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று இலங்கை உலமாக்கள் சபையும், இலங்கையில்
உள்ள முஸ்லிம் கவுன்ஸில் என்ற அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
குறைகள் இருப்பின் முஸ்லிம்கள் பிரிட்டனுக்கான இலங்கை தூதுவரிடம் அது
குறித்து முறைப்பாடு செய்யலாம் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
ஏனெனில் கடந்த காலத்தில் இந்த உலமாக்கள் சபையினர் மீது கெடுபிடிகளை
கடுமையாக்கும் என்கிற பயமும் இவர்களிடம் காணப்படலாம். இருப்பினும் லண்டனில்
பேராட்டப் பேரணியைக் கண்ணுற்ற இந்த பலசேனாக்கு சற்றுக் குழப்பதை உண்டு
பண்ணியிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. அரசும் நீண்டகாலமாக பேசாமல்
இருந்து வந்தபோதிலும் தற்போது இதுபற்றிய சட்டரீதியான நடவடிக்கைகளை
மேற்கொள்வதைப் பார்க்கின்றபோது இந்த அமைப்புக்களை விரைவில் முடிவுக்கு
கொண்டுவரும் நிலமை அரசியல் வட்டாரங்களில் காணப்படுவதுபோலவே தோன்றுகின்றது.
அதேவேளை கடந்தவாரத்தில்
பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதிக்கு
கடிதம் எழுதி அதில் ஒப்பமிட்டு அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டன.
மிகப்பெரிய பகிடி என்னவென்றால் அரசுடன் ஒட்டி உறவாடுகின்றவர்களும் இதில்
ஒப்பமிட்டு மக்களை ஏமாற்றுவதாக நினைத்துள்ளமைதான் இந்த பகிடியாகும். அதாவது
இலங்கையில் பௌத்த கடும்போக்கு சக்திகளிடமிருந்து தமது சமூகத்தைப்
பாதுகாக்குமாறு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷவை கேட்டுக்கொண்டுள்ளனராம். கடந்த ஆண்டில் முஸ்லிம் பள்ளிவாசல்கள்
மீதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் பௌத்த பிக்குகளால் நடத்தப்பட்ட மதவாதத்
தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை வலுப்பெற்று வந்துள்ளது. இந்தத்
தாக்குதல்களின் பின்னணியில் இருப்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கு
காவல்துறை தவறியுள்ளதாக சமூக நல்லுறவை வலியுறுத்துகின்ற பௌத்த பிக்குகளும்
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டில் நடக்கும் மத வெறுப்புணர்வுக்
குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக தனியான காவல்துறை பிரிவு ஒன்றை
இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கடித்தத்தில்
இலங்கையின் பௌத்த கடும்போக்கு சக்திகளால் முஸ்லிம்கள்
சந்தித்துக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள் பட்டியலிட்டிருப்பதாகவும்
அவற்றிலிருந்து தமது சமூகத்தைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை
வைத்திருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய இணைப்பாளரும் இந்த
கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான ஹூனைஸ்
பாரூக் அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இக்கடிதம்
சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்
கடிதத்தில் ஒப்பிடமாட்டேன் நேரடியாக ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவோமே
என்றும் கூறியிருந்தார்.
இவற்றையெல்லாம் பார்த்துவிட்ட பொதுபல
சேனாவுக்கு வந்தது மற்றொரு ஐடியா அதுதான் இலங்கையில் பாகிஸ்தான்
தீவிரவாதிகள் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு தீவிரவாதப் பயிற்சிகளை
வழங்குகின்றனர் என்று கதையொன்றைக் கட்டிவிட்டார். அதாவது பாகிஸ்தான்
தீவிரவாதிகளுடன் இலங்கை முஸ்லிம் அமைப்புகள் தொடர்புகளை வைத்துள்ளமை
உறுதியாகி விட்டது என தெரிவித்த பொதுபலசேனா பௌத்த அமைப்பு யுத்த கால
கட்டத்தை விடவும் தற்போது வடக்கு கிழக்கில் பாதுகாப்பினை அதிகரிக்க
வேண்டும் எனவும் குறிப்பிட்டது. எம்மை பகைத்துக் கொள்வது கண்ணாடி வீட்டில்
இருந்து கல் எறிவதைப் போன்றது. அதே போல் நாட்டில் மதரசாக்களிலேயே முஸ்லிம்
தீவிரவாதம் பரப்பப்படுகின்றது எனவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து
தெரிவிக்கையில், இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் பரவியுள்ளதாக கடந்த இரண்டு
ஆண்டுகளாக நாம் குறிப்பிட்டே வந்தோம். ஆனால் அரசாங்கம் எமது கருத்தினை
கவனத்திற் கொள்ளவில்லை. ஆனால் நாம் சொன்ன காரணம் இன்று உண்மையாகி விட்டது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் ஒன்றிணைந்து இந்தியாவை தாக்க இலங்கை முஸ்லிம்
தீவிரவாதிகள் செயற்படுகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாகவும்
அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ஆதாரமற்ற பிழையான செயற்பாடுகளை
கூறுகின்ற இந்த அமைப்பினர் கடந்த கால யுத்தத்தின்போது பாகிஸ்தான்
விமானங்களையும், விமானிகளையும் அனுப்பி வடபகுதியை மீட்டதாக இவர்களே கூறி
பாகிஸ்தான் எங்கள் தோழர்கள் என்றனர். இப்போது தீவிரவாதப் பயிற்சி
என்கின்றனர். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவிதமாகக் கூறம் இவர்களுக்கு
ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாக தங்களுக்குள்ளே அடித்து மூட்டுகின்ற நிலைமை
தோற்றம் பெற்றுள்ளது. அது விரிவடைந்து சூறாவளியாக மாறுகின்ற காலம்
வெகுதொலைவில் இல்லை. எப்போதும் உண்மையே வெல்லும். இதனை நன்குணர்ந்து
இலங்கைவாழ் சிறுபான்மையினரில் மேற்கொள்ள எத்தனிக்கின்ற அல்லது
முயற்சிக்கின்ற விடயங்களிலிருந்து தவிர்ந்து எல்லோரும் இந்நாட்டு பிரஜைகள்
என்பதை உணர்ந்து நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல அனைவரும்
கைகோர்ப்பார்களாக இருந்தால் உண்மையில் அமைதிப் பூங்காவாக இந்த இலங்கை மாதா
காணப்படுவாள் இதனை எப்போது நினைப்பார்கள்!
-தந்திமகன்-