Sunday, January 19, 2014

ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு முஸ்லிம் காங்கிரஸ் முறைப்பாடு

ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு முஸ்லிம் காங்கிரஸ் முறைப்பாடு- சரத் பொன்சேகாவும் ஐ.நாவில் முறைப்பாடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முறைப்பாடு செய்ய உள்ளது.
இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.


முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் அரசாங்கமோ, பொறுப்பு வாய்ந்த தரப்பினரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சர்வதேச முஸ்லிம் இளைஞர் பேரவையின் தலைவர் அஸ்ரப் உசேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த வாரம் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் அல்லாத முஸ்லிம் சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், வைத்தியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டவர்கள் சர்வதேச சமூகத்திடம் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளனர்.

பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா முறைப்பாடு செய்யப்படும்: சரத் பொன்சேகா

பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்யப்படும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டமொன்றை நடத்த விடாது பொலிஸார் தடை ஏற்படுத்தினர். இந்த நடவடிக்கையானது ஜனநாயக விரோதமானது.

பலபிட்டிய பிரதேசத்தில் பொதுக் கூட்டத்தை நடத்த விடாது பொலிஸார் இடையூறு செய்தனர்.

இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படும்.

இந்த சம்பவம் தொடர்பில் நாட்டின் சகல தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கும் அறிவிக்கப்படும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.