போதிய அலுவலர்கள் இல்லாத காரணத்தால் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் தாமதமாவதாக அரசு தரப்பினர் கூறுவதை அனுமதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட போதே தலைமை நீதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை, தமிழில் மொழிபெயர்ப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக, சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்வதற்கு முடியாமல் இருப்பதாக அரச தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் அரச தரப்பின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
தேவையான தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை உடனடியாகப் பெற்றுக்கொண்டு, பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அரச தரப்புக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அன்றைய தினத்துக்கு முன்பு சந்தேக நபர்கள் மீதான குற்றப்பத்திரிகைகளை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் அரச தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.