Wednesday, July 4, 2012

வட்டக்கண்டல் சமூகத்தின் உயிர்நாடி – வட்டக்கண்டல் முஸ்லிம் வித்தியாலயம்


புத்தளம் நகரிலிருந்து மன்னார் வீதியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வட்டக்கண்டல் கிராமத்தின் உயிர்நாடியாய் பு/வட்டக்கண்டல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயம் திகழ்ந்து வருகிறது.
புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் மேற்பார்வையின் கீழ் வடக்குக் கோட்டத்தில் மன்னார் வீதியில் இயங்கிவரும் மணல்தீவு வி., வேப்பமடு மு.வி., எலுவன்குளம் மு.வி., கரைத்தீவு மு.வி. ஆகிய தமிழ் மூல பாடசாலைகளுள் பு/வட்டக்கண்டல் வித்தியாலயமும் ஒன்றாகும்.
தற்போது சுமார் 800 மாணவர்களையும் 31 ஆசிரியர்களையும் கொண்டுள்ள இப்பாடசாலையில் முதலாம் தரம் முதல் க.பொ.த. சாதாரண தரம் வரையான வகுப்புகள் காணப்படுகின்றன. க.பொ.த. உயர் தர கலைப் பிரிவை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வட்டக்கண்டலைப் பூர்வீகமாகக் கொண்ட, பல்வேறு இடங்களிலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் சேவையாற்றுவோரின் ஆரம்பக் கல்விக்கு இப்பாடசாலை அடித்தளமிட்டிருக்கிறது. தற்போது அவர்கள் ஆசிரியர்களாக, அதிபர்களாக, வைத்தியர்களாக, தொழில்நுட்பவியலாளர்களாக, அரசியல்வாதிகளாக, தொழில்நிபுணர்களாக பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
மனித நேயம் கொண்ட புத்திஜீவிகளையும் துறைசார் நிபுணர்களையும் கொண்ட தலைமைத்துவத்தையும் உருவாக்குதல்’ என்ற நோக்கையும் ஒழுக்க விழுமியங்களை, பண்பாடுள்ள மனித நேயத்தை, சவால்களுக்கு முகங்கொடுக்கும் தற்துணிவை, இச்சமூகம் வேண்டிநிற்கும் துறைசார் நிபுணர்களை பு/வட்டக்கண்டல் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர், மாணவர் ஆகிய நாம் கட்டியெழுப்புவோம்’ என்ற இலக்கையும் அடையக்கூடிய இலட்சியப் பாதையில் இப்பாடசாலை வீறுநடை போடுகிறது.
1937 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, இதுவரை 38 அதிபர்களைச் சந்தித்துள்ளது. இதன் முதல் அதிபராக மு. ஐதுரூஸ் லெப்பை அவர்கள் சேவையாற்றினார்கள். வட்டக்கண்டல் சமூகத்துக்கு அறிவுக் கண்ணைத் திறந்து வைத்த உத்தமரும் இவர்தான் என்றால் அது மிகையாகாது. இதேபோன்று இவரை அடுத்து வந்த அதிபர்களும் இப்பாடசாலைக்கான உட்கட்டமைப்பு வசதிகள், ஆளணி மேம்பாடு, நிர்வாக கட்டமைப்பு என பல்வேறு அபிவிருத்திகளை மிகவும் கச்சிதமாக மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று எதிர்கால வளர்ச்சிகளுக்கும் வழிவகைகளை செய்து விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
சிலபோது வட்டக்கண்டல் சமூகத்தில் அப்போது வாழ்ந்த யுவதிகள் கல்வியில் நாட்டமின்றி பாடசாலைக்கு வராது வீடுகளிலேயே இருந்தவேளை, வீடுவீடாகச் சென்று அவர்களை பாடசாலைக்கு வரவழைத்து, கல்வி போதித்து, பெண் கல்விக்கு உயிர்கொடுத்த உத்தம அதிபர்களும் இப்பாடசாலை வரலாற்றை அலங்கரித்திருக்கிறார்கள். இதுபோன்ற முன்னாள் அதிபர்கள் எப்போதும் மனதால் கௌரவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
2005 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற தற்போதைய அதிபர் H.U.M. யஹ்யா (SLPS- 2 II) அவர்கள் இப்பாடசாலையில் விளைதிறன் மிக்கதொரு நிர்வாக மறுசீரமைப்பை ஏற்படுத்தி பல்துறை அபிவிருத்திகளுக்கும் வழியமைத்துள்ளார்.
தனது ஆளுமையை உச்சமாகப் பயன்படுத்தி இப்பாடசலைக்கான உட்கட்டமைப்பு வசதிகள், திறன்மிக்க ஆளணி மேம்பாடு, சிறந்த நிர்வாக ஒழுங்கு என பல்துறைகளிலும் சடுதியான அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார். இவ்வாறான நிர்வாக முயற்சிகளுக்கும் அதன் வெற்றிகளுக்கும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் தூண்டுதல்களும் பெற்றோர்களின் பங்களிப்பும் உந்து சக்தியாய் அமைந்துள்ளன.
ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தியை மேம்படுத்துவதில் பாடசாலை நிர்வாகம் மிகவும் கரிசணை காட்டி வருகிறது. ஆசிரியர்களுக்கான ஆளுமையை வலுவூட்டல், பட்டப்படிப்பு – பட்டப்பின் படிப்புகளுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல், ஆசிரியர்களுக்கு மத்தியில் தொழில் பிணைப்பை வலுப்படுத்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களை பாடசாலை நிர்வாகம் அவ்வப்பபோது செய்து வருகின்றது.
மாணவர்களின் கற்றல் செயற்பாடு தவிர விளையாட்டு, மாணவர் மன்றம், இலக்கிய மன்றம், முதலுதவிப் பாசறை, தலைமைத்துவப் பயிற்சி, சாரணர் பயிற்சிப்பாசறை என பன்முக ஆளுமை கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்குவதில் வட்டக்கண்டல் பாடசாலை திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.
பாடசாலை மட்ட, வலய மட்ட, கோட்ட மட்ட, மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில்கூட இப்பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட சில விளையாட்டுக்களில் சாதனை படைத்துள்ளனர். முன்னணிப் பாடசாலைகளில் போன்றல்லாது விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறையாக இருக்கின்ற போதிலும் மாகாண மட்டங்களிலும் முன்னணிப் பாடசாலைகளுக்கு ஈடாக இப்பாடசாலை மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த வருடம் இப்பாடசாலை மாணவன் ஆ. முஜாஹித் 15 வயதின் கீழ் உயரம் பாய்தல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார். இதே போட்டியில் 5 ஆம் இடத்தை இப்பாடசாலை மாணவனான ஆ. முபாரிஸ் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2012 ஜனவரியில் இப்பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் அதிபர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதும் இவ்வைபவத்தில் கலந்து கொண்ட பிரமுகர்கள் இறுதிநாள் நிகழ்வை விறுவிறுப்பாக ரசித்து, பாராட்டிவிட்டுச் சென்றதும் புத்தளம் வடக்குப் கோட்டப் பாடசாலைகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவே அமைந்திருந்தது.
இவ்வாறே இப்பாடாசலை மாணவ-மாணவிகள் சிறுகதை, எழுத்தணி, கிராஅத், கவிதை என எழுத்துத் துறையிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பாடசாலை மட்டப் போட்டிகளில் பலமுறை வெற்றியீட்டி சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் சிகரமாக திகழும் தகவல் தொழில்நுட்ப அறிவையும் இப்பாடசாலை மாணவர்கள் தாராளமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இப்பாடசாலைக்குள்ளேயே இருக்கிறது. அடிப்படை வசதிகளைக் கொண்ட கணினிக்கூடம் ஒன்றின் மூலம் மாணவர்கள் கணினி அறிவைப் பெற்றுக் கொள்கின்றனர்.
வட்டக்கண்டல் வித்தியாலயத்தை சர்வதேசத்திலும் அறிமுகப்படுத்தும் வண்ணம் www.wattakkandal.sch.lkஎனும் இணையத் தளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையின் அன்றாடச் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை பல்வர்ண புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள், அறிக்கைகள், கட்டுரைகள், கவிதைகள் என பல்லூடகங்களின் வாயிலாக வெளியிட்டு வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சுயஆக்கங்களும் பதிவேற்றம் செய்யக்கூடிய வசதிகளும் அவ்விணையத்தில் காணப்படுகிறது.
இதுமட்டுமன்றி, இப்பாடசாலையின் செயற்பாடுகள் குறித்த ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் பரிமாறிக்கொள்ளும் வகையில் wattakkandal.g.m.v@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் இப்பாடசாலைக்கு இருக்கிறது.
இவ்வாறு வட்டக்கண்டல் கிராமத்தின் முழு சமூகத்துக்கும் அறிவுப் பொக்கிஷமாகத் திகழ்ந்து தனது வெற்றிகர பயணத்தை மேற்கொண்ட பு/வட்டக்கண்டல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயம் எதிர்வரும் ஜூலை மாதம் தனது 75 வருட பூர்த்தியை சந்திக்கவிருக்கிறது. இந்த வைர விழாவை அடையாளப்படுத்தும் வகையிலேயே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.
யு.சு.ஆ. ஹஸீப்
ஆசிரியர்
பு/வட்டக்கண்டல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயம்