கொழும்பு: யாழ் பகுதியில் உள்ள பெண்களை வேலை வாங்கித் தருவதாக மலேசியாவுக்கு அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்த நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டியுள்ளது விக்கிலீக்ஸ். பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தமது தலைமைக்கு தாம் அறியும் அந்நாட்டு ரகசியங்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வழக்கம். இவ்வாறு அனுப்பப்படும் ரகசியங்கள் கேபிள் மூலமாக அமெரிக்க தலைமைக்கு செல்லும். அத்தகவல்களை இடைமறித்து ரகசியங்களை வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ்.
அந்தவகையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், தமது தலைமைக்கு அனுப்பிய நம்பிக்கையான சில் ரகசியத் தகவல்களை தற்போது ‘த டெலிகிராப்ஃ ‘ நாளிதழுக்கு வழங்கி அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.
அதில், அப்பாவி பெண்களை வைத்து மலேசியாவில் பாலியல் தொழில் நடப்பதாகவும், இதில் பல அப்பாவி ஆண்களும் அடிமைகளாக வேலைப் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க தூதரகம் எழுதியுள்ள தகவலில், ‘இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் இத்தகவலை தனது தலைமைக்கு ‘சீக்கிரெட்’ என்று பெயரிட்டு அனுப்பியுள்ளார்.
அதாவது யாழில் உள்ள பல பெண்களை டக்ளஸ், மலேசியாவுக்கு அனுப்பிவருவதாகவும், வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறியே இவர் பல பெண்களை மலேசியாவுக்கு அனுப்புவதாகவும், இதில் சாந்தராஜா என்னும் பெரும் புள்ளி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தராஜாவுக்கு மலேசியா மற்றும் இலங்கையில் பல வர்த்தக நிலையங்கள் உள்ளதாகவும், இவர் அடிக்கடி யாழ் சென்று டக்ளஸை சந்தித்து திரும்புவதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.