அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம் பளீல் (நளீமி)

வித்தியாசமான பல கோணங்களில் சிந்திப்பவர்களது கருத்துக்களுக்கு செவிமடுக்கப்பட்டு இறுதியாக தீர்மானங்கள் பெறப்படும் போது சமூகம் இஸ்திரமான அடிப்படைகளைப் பெற்றிருக்கும். தற்காலத்திலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம், தொடர்பாடல், உளவியல் என்று துறைகள் பலதரப்பட்டவையாக இருப்பதால் பல்துறை சார் நிபுணர்களது ஆலோசனைகள் பெறப்பட்டட பின்னரே மிக முக்கிய தீர்மானங்களுக்கு முஸ்லிம் சமூகம் வர வேண்டும். கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய சவால்களுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு மாத்திரமல்ல எதிர்காலத்திற்கான காத்திரமான திட்டங்களை வகுப்பதற்கும் பிற சமூகங்களுடனான நல்லுறவைப் பேணுவதற்கும் இது அவசியப்படுகிறது.
அந்தவகையில், இலங்கை முஸ்லிம்களது சகல துறைகளையும் இஸ்லாத்தின் வழி நின்று திட்டமிடுகின்ற ஓரு பொதுச் சபை அல்லது கூட்டுத் தலைமை உருவாக்கப்பட வேண்டுமென்ற கருத்து அண்மைக்காலமாக வலுப்பெற்றுவந்துள்ளது. இது பற்றிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்ட போதும் ஆக்கங்கள் எழுதப்பட்ட போதும் சமூகம் பேரார்வத்தோடு அதனை வரவேற்றது. அப்படியான ஒரு சபை பற்றிய கருத்துக்களை கேட்டறிவதற்காக இலங்கையின் தஃவா மற்றும் சமூகசேவை அமைப்புக்களது தலைவர்களும்,முக்கியஸ்தர்களும், துறைசார் நிபுணர்களும், புத்திஜீவிகளும் அழைக்கப்பட்டு, இரண்டு முக்கியமான கூட்டங்கள் தலைநகரில் நடத்தப்பட்டபோது அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இச்சபையின் உருவாக்கத்திற்கு ஊக்கமளித்தார்கள். உண்மையில் இவ்விரு கூட்டங்களும் தேசிய ஷூரா பற்றிய கோட்பாட்டை சமூகத்திற்கு முன்வைத்து அது பற்றிய சமூகத்தின் மஷூராவை – ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டவையாகும்.
தற்போது அதனை நோக்கிய பயணத்தின் ஒரு முக்கிய கட்டமாக இலங்கை முஸ்லிம் பேரவை என்ற பெயரில்அதற்கான நிறைவேற்றுக் குழுவும்(Executive Committee), செயலகக் குழுவும்(Secretariat) நியமிக்கப்பட்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ். ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மாகாண, மாவட்ட, நகர, கிராம மட்டங்களிலான உப குழுக்கள் அமைக்கப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாகஜர் தயாரிப்பு
முஸ்லிம் பேரவையின் முதல் கட்ட நடவடிக்கையாக இலங்கை முஸ்லிம்கள் அண்மைக் காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை தடுத்து நிறுத்தும்படி ஜனாதிபதியை கோரும், மகஜர் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியல் கையெழுத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இது இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக வாழும் முஸ்லிம்களுடைய அடிப்படை உரிமைகளில் சில தீய சக்திகள் அத்துமீறல் செய்வதை தடுக்கும்படி கண்ணியமாகவும் நிதானமாகவும் நாட்டின் தலைவரை வேண்டிக் கொள்ளும் ஜனநாயக அணுகுமுறையாகும்.. தற்போது எதிர்த் தரப்பிலிருப்போர் ஆளும் கட்சியினராக மாறும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் வந்தாலும் இதுபோன்ற சாத்வீக வழிமுறைகளை ஷூரா கையாளும்.இதிலிருந்து அரசியலில் ஷூராவுக்கு நடுநிலைத்தன்மை இருக்கிறது என்பது நிரூபனமாகும்.
அரசியல் நிலைப்பாடு
தேசிய ஷூரா சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மிகுந்த கரிசனையோடு முன்வைத்த சில சகோதரர்கள் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருப்பதாகவும் தேர்தலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சில நிலைப்பாடுகளை எடுத்திருப்பதாகவும் கூறி ஷூரா பற்றிய சந்தேகங்கள் சிலரால் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கு பின்வரும் வகையில் பதிலளிக்க முடியும்.
- 1.அந்த அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகக் கூறப்படும் சகோதரர்களது தனிப்பட்ட கருத்தாகவே அது கொள்ளப்படுகிறது. அதே வேளை அவர்கள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அல்லர். செயலகக் குழுவில் மட்டுமே அவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். நிறைவேற்றுக் குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களும் முடிவுகளுமே ஷூராவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளாக கணிக்கப்படும். செயலகக் குழுவில் இருப்பவர்கள் எடுக்கும் தனிப்பட்ட எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரத்தை பெற்றிருகக்கத் தேவையில்லை. அந்த வகையில் மேற்படி சகோதரர்கள் அரசியல், சமூக சேவை, பொருளாதார நடவடிக்கைகள், மீடியாச் செயற்பாடுகள், தஃவா முயற்சிகள் என்பவற்றில் ஈடுபடும் போது அவற்றை ஷூராவின் நிறைவேற்றுக் குழுவின் முடிவுகளாக எவரும் கருதத் தேவையில்லை.
- 2.ஷூரா என்பது நாட்டின் எதிர்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியின் ஊடகமோ அல்ல. அதேவேளை எதிர்க்கட்சிகளோ ஆளும் தரப்பினரோ எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கும் பட்சத்தில் பொதுவாக நாட்டின் நலன்களையும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நலன்களையும் கருத்திற் கொண்டு எதிர்க்கவோ ஆதரிக்கவோ கருத்து வெளியிடவோ ஷூராவுக்கு உரிமையுண்டு.
ஷூரா அரசியலில் நேரடியாக ஈடுபட மாட்டாது. ஆனால் முஸ்லிம் சமூகத்திலுள்ள கட்சிகள், தனி நபர்களது அரசியல் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் இஸ்லாமிய நோக்கிலும் நடைமுறையைக் கருத்திற் கொண்டும் ஆய்வு செய்து கருத்து வெளியிடும். மேலும்,முஸ்லிம் சிறுபான்மையினருக்குப் பொருத்தமான அரசியல் நகர்வுக்கான அடிப்படையான வழிகாட்டல்களை வழங்க அது தன்னாலான அனைத்தையும் செய்யும். நீதி, சமத்துவம், சுதந்திரம், அபிவிருத்தி போன்றன இருக்கும் இடங்களில் ஷூராவின் ஒத்துழைப்பு இருக்கும். அராஜகம், சுயநலம், அடக்குமுறை, லஞ்சம், ஊழல், நயவஞ்சகம் என்பன ஷூராவின் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும். இதில் கட்சி வேறுபாடுகள் இருக்க மாட்டாது.
இவ்வாறு கூறப்படும்போது ஷூரா என்றால் அரசியல் செயல்பாடுகள் பற்றி மட்டும் பேசும் ஒரு பொறிமுறை என்பது பொருளல்ல. அது நாட்டினதும் முஸ்லிம் சமூகத்தினதும் அரசியல், பொருளாதார, சுகாதார, சமூக, சன்மார்க்க விவகாரங்கள் பற்றியெல்லாம் திட்டங்களை சிபார்சு செய்யும் சுதந்திரமான தனித்துவமான அமைப்பாகும்.
தேசிய நலன்+முஸ்லிம் சமூக நலன்
தேசிய ஷூரா சபையானது ஏக காலத்தில் இரு பிரதான இலக்குகளைக் கொண்டதாகும்.
அ. தேசிய நலன், நாட்டின் அபிவிருத்தி, சகல இனங்களதும் ஒட்டுமொத்த நலன்கள், சமாதான சகவாழ்வு என்பவற்றை இலக்காகக் கொண்ட முழு நாட்டிற்குமான செயற்பாடுகள்
ஆ. முஸ்லிம் சமூகத்தின் நலன்கள், வளர்ச்சி, அபிவிருத்தி,பிரச்சினைகளுக்கான தீர்வுகள் சம்பந்தமான செயல்பாடுகள்
எனவேதான் `சிரீலங்கா முஸ்லிம் பேரவை` என அதற்கு பெயரிடுவது பொருத்தம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. `சிரீலங்கா` என்ற சொல் (அ)என்ற இலக்கையும், முஸ்லிம் எஸம்ப்லி என்பது (ஆ)என்ற இலக்கையும் அடையேவே இடப்பட்டதாகக் கருத முடியும். நாட்டின் பொது நலனை புறக்கணித்து விட்டு முஸ்லிம் சமூக நலன்களில் மட்டும் அக்கறை கொள்வதோ நாட்டின் நலன்களுக்காக மட்டும் உழைத்து முஸ்லிம் சமூக நலன்கைள இழப்பதோ முறையல்ல என்பதால் இரு நலன்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக அமைதல் வேண்டும் என்பதே ஷூராவின் இலட்சிய எல்லையாகும்.
ஷூராவின் செயல்பாடுகளுக்கு ஊக்குவிப்பு வழங்குவதும் தவறுகள் இழைக்கப்படும்போது நிதானமாக, தூய உள்ளத்தோடு சுட்டிக்காட்டுவதும் சமூகத்தின் பொறுப்பாகும். ஷூரா –ஆலோசனை எனப் பெயரிட்டு விட்டு ஒருசிலரின் முடிவுகளின் படி செயற்வதற்கு ஷூரா சபை முயலமாட்டாது. கருத்து சொல்லும் தகுதியும் அறிமுள்ள எவரதும் ஆலோசனைகளுக்காக ஷூராவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். இது முஸ்லிம் சமூகத்தின் அன்றி தனிமனிதர்களின் சொத்தல்ல. பரஸ்பரம் கலந்தாலோசிப்பதும் உபதேசிப்பதும் வரவேற்கத்தக்கது. விமர்சிப்பவர்கள் தனிப்பட்ட அரசியல், பொருளாதார நலன்களுக்காக விமர்சித்தால் அல்லாஹ் அவர்கள் பற்றி நன்கு அறிந்தவன். எமது பலவீனங்களும் பிளவுகளும் முஸ்லிம் சமூகத்தின் எதிரிகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமையும். ஊகங்கள், தனி நபர் நலன்கள், அறிவீனம் என்பவற்றின் அடியான எந்த விமர்சனத்துக்கும் ஷூரா செவிமடுக்க வேண்டிய அவசியம் இருக்க மாட்டாது. பல மாதங்களாக எடுக்கப்பட்ட பலத்த முயற்சியின் விளைவாக தேசிய ஷூரா உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை இந்த நாட்டின் பிரதான நீரோட்டத்திலுள்ள சகல முஸ்லிம் அமைப்புகளும் அங்கீகரித்திருக்கின்றன. அது தற்போது ஆரம்ப நிலையில் இருக்கிறது. அல்லாஹ்வின் அருளால் அது தனது கனிகளை விரைவில் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அல்லாஹ்வின் அருள் ஐக்கியமாகவும் கலந்தாலோசித்து செயல்படுபவதிலும் தங்கியுள்ளது. பின்வரும் நான்கு பண்புகளை நாம் பெற்றில்லாதபோது தோல்வியடையலாம் என்பது அல்லாஹ்வின் கருத்தாகும்.
``காலத்தின் மீது சத்தியமாக! மனிதர்கள் நஷ்டத்தில் இருக்கிறார்கள். ஆனால்,
(103:1-3)